ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்கு ரணிலே பொறுப்பு: குற்றஞ்சாட்டும் பொன்சேகா

ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க அடைந்த தோல்விக்கான 99 வீதமான பொறுப்பை ரணில் விக்கிரமசிங்கவே ஏற்றுக்கொள்ளவேண்டுமென தெரிவித்துள்ளார் சரத் பொன்சேகா.

கிரிபத்கொடவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

“எமது அரசு பல தவறுகளைச் செய்தது. நல்லாட்சி எனக் கூறிக் கொண்டு மக்களை மறந்து செயற்பட்டது. அதில் 99 வீதமான பொறுப்பு ஐ.தே.கவின் தலைவருக்கே உள்ளது. அதாவது முன்னாள் பிரதமர். தொழில் வாய்ப்புக்களை வழங்கவில்லை. சில அமைச்சர்கள் 7 அல்லது 8 பேருக்கு தொழில்வாய்ப்பு வழங்கினர். ஓர் அமைச்சர் வழக்குதாக்கல் செய்துள்ளார்.

அவரது அமைச்சிலிருந்து 1,500 பேரை வெளியேற்றியுள்ளார். அந்த 1,500 பேரும் அமைச்சரின் தொகுதியைச்சேர்ந்தவர்கள். எமது தொகுதிகளுக்கு அவ்வாறு கிடைக்கவில்லை. பிரதமர் அதற்கு பொறுப்புக் கூறவேண்டும்.

நிதி முகாமைத்துவத்தைச் சரியாக மேற்கொள்ளவில்லை. கொழும்பு மாவட்டத்திலும் நாம் தோல்வியடைந்தோம். வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு 630 கோடி ரூபாவை ஒதுக்கியிருந்தார். அந்தப் பணத்தை ஒரு வருடத்தில் செலவிட முடியாதென்பது பிரதமருக்கு புரியவேண்டும்.

அரசியலில் முதிர்ச்சியிருந்தாலும், அதைப் புரிந்து கொள்ளும்இயலுமை அவருக்கு இல்லையயன்பது புரிகிறது. இறுதியில் எமது ஜனாதிபதி வேட்பாளரே சிக்கினார். நாம் வெற்றிப் பாதைக்குத் திரும்புவதென்றால், கட்சித் தலைமையில் முகங்களை மாற்றவேண்டும்” என்றார்.