இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிப்பகுதிகளில் மனிதாபிமான, மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
போரின் போது மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் முறையாக அங்கீகரித்து, பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
இதன்படி அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் “20 ஆண்டுகள் கடந்தும் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை” என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
I Died Many Times என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள 40 பக்க அறிக்கையில் குறித்த விடயங்கள் கூறப்பட்டுள்ளன.
மேலும், போர்க்கால மீறல்கள் மற்றும் தண்டனையிலிருந்து தப்பிக்கும் போக்கு குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“2006 முதல் 2009 மே மாதம் வரையிலான காலப்பகுதியில் மருத்துவமனைகள், நிவாரணப் பணிகள் மற்றும் மனிதாபிமானப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தற்செயலானவை அல்ல.
மேலும், போர்க்களத்தில் நடக்கும் குற்றங்களை சுயாதீனமான பார்வையாளர்கள் நேரில் பார்ப்பதைத் தடுக்கவும், பொதுமக்களை அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் முடக்கவும் மனிதாபிமான உதவிகளுக்கான வாய்ப்புகள் திட்டமிட்டே முடக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, 2006 ஆகஸ்ட் மாதம் மூதூரில் Action Against Hunger நிறுவனத்தைச் சேர்ந்த 17 உள்ளூர் பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இதற்கு முக்கிய எடுத்துக்காட்டாக அமைகிறது என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு நான்கு முக்கிய நடைமுறைகளே காரணம் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதலாவதாக நடந்தது குறித்து அரசாங்கம் தனது பொறுப்பைத் தொடர்ந்து மறுத்து வருவது இரண்டாவதாக உள்நாட்டு விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடரல்கள் நீதியைப் பெற்றுத் தருவதில் தோல்வியடைவது ஆகிய காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களும் முறையான பாதுகாப்பின்மையும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேநேரம், முறையான சட்ட நடவடிக்கைகளுக்குப் பதிலாக, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பயனற்ற விசாரணை ஆணைக்குழுக்களை மட்டுமே நியமித்து காலத்தைக் கடத்தியதாகவும் அறிக்கையில் அடிகோடிடப்பட்டுள்ளது.
இதன்படி போரின் போது மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் முறையாக அங்கீகரித்து, பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முழுமையான இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. ‘
மேலும், இந்த விவகாரத்தில் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும், தொடர்புடையவர்கள் மீது தடைகளை விதிக்கவும் சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்றும் ஐ.நா. பரிந்துரைத்துள்ளது



