மாவீரர் வாரத்தின் இறுதி நாளுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

மாவீரர் நாள் இறுதிநாள் நிகழ்வுகள் நாளைய தினம் (27) முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் மாவீரர் நினைவாலயம் ஒன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை அலுவலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் (26) இந்த நினைவாலயம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவீரர் துயிலுமில்லங்கள் இராணுவத்தினரால் இடித்து அகற்றப்பட்ட நிலையில் வித்துடல்கள் விதைக்கப்பட்ட கல்லறையின் கல்வெட்டுக்கள் இந்த நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மாவீரர் நாளான நாளைய தினம் (27) வெள்ளிக்கிழமை 6.05 மணிக்கு மணியோசை ஒலிக்கப்பட்டு, 6.06 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு , 6.07 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் – நெல்லியடியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

மாவீரர்களின் தந்தை ஒருவரால் பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு குறித்த நினைவாலயம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம், பொதுச் செயலாளர் சுமந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

நினைவாலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளைப் பொதுமக்கள் பார்வையிட்டதுடன், மாவீரர்களின் உருவப்படங்களை வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.

அதேநேரம், யாழ். வலிகாமம் வடக்கு, தெல்லிப்பழையில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் போது சிறுவர்களின் வாத்திய இசையுடன் பெற்றோர், உரித்துடையோர் அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

அதனைத் தொடர்ந்து மாவீரரின் தந்தை ஒருவரால் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்ட நிலையில் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.