உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில் கோட்டாபய ராஜபக்சவை சந்தேகநபராக பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
இதன்படி அவரது கைது குறித்து, விசாரணை அதிகாரிகளே முடிவு செய்ய வேண்டும் என்றும் மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தில் கோட்டாபய ராஜபக்ச மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை நீக்க கோரி அவர் முன்வைத்த மனுவும் நேற்று (25) நிராகரிக்கப்பட்டது.
இந்த பின்னணியிலேயே சட்டமா அதிபர் திணைக்களத்தால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச இன்னும் சந்தேக நபராகப் பெயரிடப்படாததால், அவரை மீண்டும் வழக்கில் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதுவரை பயணத் தடையை நீக்குவது விசாரணைகளுக்கு பாரிய பாதிப்பை உருவாக்கும் என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது.
270-க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியான மிகவும் உணர்வுப்பூர்வமான வழக்கு இது என்பதை நினைவுப்படுத்திய நீதிமன்றம் எந்த வகையிலும் இந்த விசாரணைக்கு தடைகள் உருவாகக்கூடாது என்று விசாரணையில் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கோட்டாபயவின் வெளிநாட்டுப் பயணங்கள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் சுரேஷ் சலே குறித்த முக்கிய விசாரணை அறிக்கையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
முன்னதாக சலே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட வேளையில், கோட்டாபய ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணங்கள் நீதிமன்றத்தால் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



