தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 72 ஆவது அகவை தினமான இன்று (நவம்பர்-26) வல்வெட்டித்துறையில் அவர் வாழ்ந்த காணியில் விசேடமாக அமைக்கப்பட்ட இடத்தில் மாமனிதர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் வழியில் எழுச்சிக் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 72 வது அகவை தினம் இன்றாகும். அதை முன்னிட்டு தமிழர் தாயகம், புலம்பெயர் தேசம், தமிழ்நாடு என உலகத் தமிழர் பெரும்பரப்பில் வெகு விமர்சியாக கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
தலைவர் பிரபாகரன் அவர்கள் சிறுவயதில் வாழ்ந்த இடமான ஆலடி வீதியில் உள்ள காணியில் வழமைபோன்று இம்முறையும் எழுழ்சியுடன் கொண்டாடப்பட்டது. பிறந்த நாளை முன்னிட்டு ஆலடி வீதி, தலைவரது பூர்வீக காணி ஆகிய இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இன்று வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு வழமைபோன்று சிறுவர்கள் சகிதம் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கேக் வெட்டப்பட்டதை தொடர்ந்து 72 ஆவது அகவை தினத்தை குறிக்கும் வகையில் 72 எள்ளுப்பாகு உள்ளிட்ட சிற்றுண்டிகள் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது. பிறந்த நாள் நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு பயன்தரு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஊர் பொதுமக்கள், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள், அரசியல் கட்சியினர் என நூற்றுக்கணக்கில் திரண்டிருந்தனர்.
தலைவர் பிரபாகரன் அவர்களது வரலாற்றை முற்றிலுமாக அழிக்கும் வகையில் அவர் சிறுவயதில் வாழ்ந்த வீட்டை சிறிலங்கா படைகள் இடித்து தரைமட்டம் ஆக்கியதுடன் அத்திபாரத்தை கூட கிளறி அகற்றியிருந்தன. அதன் பின்னணியில் அங்கு செல்வதற்கே கடும் அச்சுறுத்தல் நிலவிய காலகட்டத்தில் மாமனிதர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் தனி மனிதனாக நின்று தடைகளை தாண்டி அந்த இடத்திலேயே கேக் வெட்டி மேதகுவின் பிறந்தநாளை கொண்டாடியமையே இன்றைய எழுச்சிக்கு வழிவகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






