ஜி.எஸ்.பி வரிச்சலுகை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விளக்கம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி வரிச்சலுகை இலங்கைக்கு 2028 ஆம் ஆண்டுவரை கிடைக்கப்பெறும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைக் காட்டிலும் பலவீனமான அம்சங்களை உள்ளடக்கிய வகையில் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சட்டத்தால் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

அதேநேரம், மாகாணசபைத் தேர்தல் பற்றி ஆராயும் பாராளுமன்ற செயற்குழுவுக்கு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் வருகைத் தருவதில்லை.

காணப்படும் சட்ட சிக்கல்களுக்கு தீர்வு காணாமல் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாது.

ஆகவே மக்கள் பிரதிநிதிகள் இந்த விடயத்தின் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் வலியுறுத்தினார்.

ஜி.எஸ்.பி வரிச்சலுகை 2028 இறுதி வரை இலங்கைக்கு கிடைக்கப்பெறும்.

இந்த வரிச்சலுகை தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சரவை உபக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.பி வரிச்சலுகையுடன் தொடர்புடைய 27 ஒப்பந்தங்களுடன் புதிதாக ஐந்து உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் தொடர்பில் புதிதாக ஒரு உடன்படிக்கை சேர்க்கப்பட்டுள்ளது.

அதற்கமையவாகவே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் தொடர்பான சட்டமூலத்தை தயாரித்துள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

அதேபோல் போதைப்பொருள் தடுத்தல் தொடர்பிலும் புதிய உடன்படிக்கை உள்வாங்கப்பட்டுள்ளது.

இலங்கையும் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாவனை உள்ளிட்ட சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளது.

இது குறித்தும் புதிய சட்டம் இயற்றப்படும்

பயங்கரவாத தடுப்புச் சட்டம் குறித்து மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை காட்டிலும் சாதகமான அம்சங்களை உள்ளடக்கிய வகையில் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் ஆக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் காணப்படும் மோசமான ஏற்பாடுகள் புதிய சட்டமூலத்தில் உள்வாங்கப்படவில்லை.

காவல்துறை அதிகாரி முன்னிலையில் வழங்கப்படும் வாக்குமூலம் நீதிமன்றில் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற ஏற்பாடு புதிய சட்டமூலத்தில் முழுமையாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பித்தல் மற்றும் தடுத்து வைத்தல் காலவகாசம் தொடர்பிலும் முற்போக்கான மாற்றங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு இராஜதந்திர மட்டத்தில் தீர்வு காண்பதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெகுவிரைவில் தீர்க்கமான ஒரு தீர்மானத்தை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.