கடந்த வாரத்தில் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் நாளாந்த வாழ்வு மீயுயர் புத்திசாலித்தனக் கருவிகளின் தொழில்நுட்பச் செயலிழப்புகளாலும், கடுமையான பாதிப்புகளை அனுபவிக்க வேண்டி நேர்ந்தது.
பிரான்ஸ் மற்றும் 7 ஐரோப்பிய நாடுகளில் உணவுச்சங்கிலிக் கடைகள் சிலவற்றின் குளிர்சாதனப் பெட்டிகளின் வெப்பநிலை இனந்தெரியாதவர்களால் அதிபுத்திசாலித்தனக் கருவிகள் வழி தனது நாட்டில் உயர்த்தப்பட்டதற்கு ஈரானின் படைப்பிரிவொன்றே பொறுப்பு என்று வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியது. பிரான்சின் இரத்த வங்கிகளின் வெப்பநிலையை மாற்ற நடந்த முயற்சிகள் உடனேயே கண்டுபிடிக்கப்பட்டதால் சேமித்து வைத்திருந்த இரத்தம் எதுவும் பழுதடையாமல் பாதுகாக்கப்பட்டது.
ஐரோப்பிய நாடுகளில் விமானங்களுக்கு பறந்து கொண்டிருக்கையில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தல்களால் பல விமானங்கள் அவசரத் தரையிறக்கங்களைச் செய்ததால் விமானப் போக்குவரத்து தாமதங்களும் ரத்துகளும் அதிகமாக இருந்தன. இத்தாலியிலும் ஸ்கொட்லாந்திலும் வட அயர்லாந்திலும் பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதால் மாணவர்களை வெளியேற்றி பாதுகாப்புச் சோதனைகள் நடாத்தப்பட்டன.
உலகளாவிய நிலையில் 13ஆம் திகதி மைக்ரோசொப்ட் 18 மணிநேரம் செயலிழந்ததால் பாராளுமன்ற நிகழ்வுகள் முதல், பொலிஸாரின் தொடர்புகள், மருத்துவர்களுக்கான தொடர்புகள் போன்ற அவசியத் தொடர்புகளை மேற்கொள்ள இயலாது இங்கிலாந்தே அல்லோலகல்லோலப்பட்டது. அன்று மாலை அமெரிக்கச் செய்திகளின்படி அங்கும் தொடர்புச் சாதனங்களின் செயலிழப்புகளால் 7,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்தது.
இவ்வாறாக உலகத் தொடர்பாடல்களில், உணவு வழங்கல்களில், மாணவர் வாழ்வுகளில் மனிதத்தன்மையற்ற செயற்பாடுகள் இன்றைய உலகின் அபாயகரமான நிலைக்கான முன்னெச்சரிக்கையாக இவை அமைகின்றன. இந்நேரத்தில், ஈழத்தமிழர்கள் போன்ற உலகின் தேச இனங்கள் தங்களுக்கிடையில் உள்ள அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அன்பான, நட்பான சமூக வட்டங்களை ஈழத்தமிழர் சமூகமாக டிஜிட்டல் முறையில் கட்டியெழுப்ப வேண்டிய தேவை ஏற்படுகிறது. இத்தகைய நட்பு வட்டங்கள் பதற்றங்களையும் ஏக்கங்களையும் தனிமைப்படுத்தல்களையும் குறைக்கும் என்பது இலக்கின் இவ்வார எண்ணம்.
பெரியவர்கள் தம்மிடையுள்ள பிடிவாதக் குணங்களால் பொதுக்கட்டமைப்புக்களில் ஒன்றிணைவதில் கஷ்டங்களை அனுபவித்து வருவதால் ஈழத்தமிழரின் ஜென்சி மற்றும் அல்பா இளைய தலைமுறையினர் தங்கள் தாய் தந்தையரைப் போல ரோம் எரிகையில் பிடில் வாசித்த நீரோ மன்னராக இல்லாது உங்களாலான டிஜிட்டல் இணைப்புக்களில் இணைந்து உங்களின் பெரியவர்களையும் உலகு சந்தித்துக் கொண்டிருக்கிற இந்த இக்கட்டான காலத்தைக் கடக்க உதவ வேண்டும் என்பதே இலக்கின் எண்ணமாகவுள்ளது.
மேலும், ரஸ்ய – உக்ரேன் பேச்சுவார்த்தை அமெரிக்கக் குழுவின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற போதிலும் அதன் விளைவு வெறுமனே சிறைப்பிடிக்கப்பட்ட கைதிகள் பரிமாற்ற இணக்கமாகவும் எந்த நாடு உக்ரேனுக்கு இராணுவ உதவியாக அமைந்தாலும் அந்த நாடும் ரஸ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டி வருமென்ற ரஸ்ய அதிபர் விளாமிடீர் பூட்டினின் அமெரிக்க தூதுக்குழுவின் நேரடிச் சந்திப்புச் செய்தியுடன் தொடர்கிறது.
ஆனால், போர்நிறுத்தமோ அல்லது அமைதிப் பேச்சுவார்த்தையோ அங்கு பேசப்பட்டதாகச் செய்திகள் வெளிவராதது உலக அமைதி தொடர்ந்து கேள்விக்குறியாகவே தொடரப் போகின்றது என்பதை உறுதி செய்துள்ளது. ஈரானும் தேவை ஏற்படின் ஐரோப்பிய நாடுகளையும் தாக்க வேண்டி வருமென்ற எச்சரிக்கையை விடுத்ததாக வெளிவந்த செய்திகள் உலகின் பாதுகாப்பு என்பது எந்நேரத்திலும் சீர்குலையக் கூடியதாக மாறிக்கொண்டிருப்பதை தெளிவாக்கியுள்ளது.
இத்தகைய சூழலில் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பான அமைதியையும் வளர்ச்சிகளையும் உறுதிப்படுத்த பல ஈழத்தமிழர் செயற்பாட்டாளர்கள் உடைய கூட்டுப் பொதுச் சமூக வலைத்தளம் காலத்தின் தேவையாகிறது என்பது இலக்கின் கருத்தாக அமைகிறது. மேலும், உலகின் இந்த இக்கட்டான சூழலுக்கு நடுவில் சிறிலங்காவின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த வாரத்தில் அதன் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டம் அனைத்துலக நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் வழி அது தனது வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு உயர் நடுத்தர வருமானமுள்ள நாடாகத் தன்னை உறுதிப்படுத்த 2020 முதல் இன்று வரை உதவிய பொருளாதார உறுதித்தன்மை நடவடிக்கைகளைப் பேணி, 2027 மார்ச்சில் அனைத்துலக நாணயநிதியத்தின் வேலைத்திட்ட நிறைவுக்குப் பின்னரும் அதே அனைத்துலக நாணய நிதியத்தின் புதிய வேலைத்திட்டமொன்றில் இணைந்து தொடர்வதற்கு ஏற்ற முறையில் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருளாதார உறுதித்தன்மையுள் ஈழத்தமிழரின் இறைமையைச் சமத்துவமானதாக ஏற்க மறுப்பதே இலங்கைத்தீவின் பொருளாதாரச் சீரழிவுக்கான மூலக் காரணம் என்கிற உண்மை மறைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாக இது அமைகிறது.
அதிலும் வடக்கிற்கு பல நிதி ஒதுக்கீடுகளைச் செய்துள்ள வரவு செலவுத் திட்டமாக இது தன்னை வெளிப்படுத்துகிறது.
• யாழ்ப்பாணம், வன்னி மாவட்டங்களுக்கான நீர் வழங்கல் திட்டம் 1,000 மில்லியன் ரூபா
• வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடுகள் கட்டும் திட்டம் 4,000 மில்லியன் ரூபா
• பாரிய கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டம் 1,800 மில்லியன் ரூபா
• வடகடல் மீன்பிடி வலைத் தொழிற்சாலையின் புனரமைப்பு 500 மில்லியன்
• மீன்பிடி நங்கூரம் இடும் தளங்களின் கட்டுமானம் மற்றும் பேசாலை மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்தல் 5,000 மில்லியன் ரூபா
என, வடக்குக்கான நேரடியான விவசாய, மீன்பிடித் துறைகளின் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடுகளும் பொதுவான மற்றைய நிதி ஒதுக்கீடுகளில் வடக்கும் கிழக்கும் உள்வாங்கப்படக்கூடிய ஒதுக்கீடுகளான
• எல் நினோ இடர் தணிப்பு மற்றும் அவசரகால எதிர்வினை 5,000 மில்லியன் ரூபா
• நீர்ப்பாசனத் துறையில் சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ளல் 200 மில்லியன் ரூபா
• வெள்ளக் கட்டுப்பாட்டுக்கான உபகரணங்களை கொள்வனவு செய்தல் 625 மில்லியன் ரூபா
• ஆடு, மாடு வளர்ப்புக்குச் சாத்தியமுள்ள மாவட்டங்களில் பண்ணைகளின் விரிவாக்கம்
• மீன் உற்பத்திப் பொருள் சந்தைப்படுத்தல் வலையமைப்பின் நவீனமயமாக்கல் 200 மில்லியன் ரூபா
• கூண்டு மீன் வளர்ப்பு 250 மில்லியன் ரூபா
என்பனவும் வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளமை எடுத்த எடுப்பிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடக்கின் பொருளாதாரத்தில் அக்கறையுள்ள அரசாங்கம் என எண்ணவைக்கிறது. ஆனால் இந்த வடக்கு மேலான அக்கறை ஈழத்தமிழர்களின் மேலான கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முயற்சிகள் வளர்ச்சிகள் என்பவற்றை அதிகரிக்கும் என்று கருத வைத்தாலும் இவை சிறிலங்காவும் இந்தியாவும் அதிக அளவிலும் சிறிலங்காவும் சீனாவும் அதற்கு அடுத்த அளவிலும் பொருளாதாரத் தேவைகளுக்குத் தேவையான சூழலை உருவாக்கும் நிதிப் பகிர்வுக்கான உத்தியென்பதே இலக்கின் கருத்தாகவுள்ளது.
சிறிலங்காவின் இன்றைய அரசாங்கத்தால் இந்தியாவுடன் ஏற்கனவே உள்ள சுதந்திர வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்காக அமைச்சரவை அலுவலர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. என்று வரவு செலவுத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது இலக்கின் கருத்துக்கு வலுச் சேர்க்கிறது. இந்த விரிவாக்கத்தில் ஈழத்தமிழர் தாயகத்தின் நிலமும் கடலும் வானும் சிறிலங்கா, இந்திய அரசாங்கங்களுக்கு தேவையான பொருளாதாரத் தளங்களாக அமைகின்றன.
இதன் விளைவே, இந்தப் பகுதிகளுக்கான இந்திய–ஈழ நில, கடல், வான் இணைப்புச் செயற்திட்டங்களாகவும் வெளிப்பட்டு வருகின்றன. இதற்கான நிதிப் பகிர்வுக்கும் நிதி முகாமைத்துவத்துக்கும் வடக்கு மாகாண சபையையும் கிழக்கு மாகாண சபையையும் அவற்றுக்கு இந்திய–சிறிலங்கா ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைந்த நிதிப்பகிர்வு அதிகாரங்களுடன் மீளவும் செயற்படுத்த வேண்டிய அவசரத் தேவை இந்தியாவினுடையதாக இன்று மாறிவருகிறது.
ஆனால், 39 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய உலக அரசியல், பொருளாதாரச் சூழலில் உருவான இந்திய சிறிலங்கா உடன்படிக்கையில் ஈழத்தமிழர்களுக்குச் சாதகமாக இருந்த ஒரே அம்சமான வடக்கு–கிழக்கு இணைந்த மாகாணசபை என்பதனை நீக்கக் கோரி தேசிய மக்கள் சக்தியின் மூலவேரான மக்கள் விடுதலை முன்னணி தொடர்ந்த வழக்கில் 16.10.2006இல் வழங்கப்பட்ட தீர்ப்புத்தான் தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான வடக்கும் கிழக்கும் இணைந்த நிலமாகப் போர்த்துக்கல், டச்சு, பிரித்தானிய காலனித்துவங்களால் கைப்பற்றப்பட்ட நிலப்பரப்பை வடக்கு என்றும், கிழக்கு என்றும் இரண்டாகப் பிரித்து வடமாகாணசபை, கிழக்கு மாகாணசபை என்ற இன்றைய வடிவத்தை உருவாக்கியது.
இதனை உறுதிப்படுத்தக்கூடிய வகையிலேயே இன்றும் அநுர குமார திசாநாயக்கா வடக்கு கிழக்கு எனப் பேசி வருகின்றார். இந்நிலையில், அநுர குமார திசாநாயக்காவின் மேலுள்ள வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு வடக்கில் அவரது அரசுக்குத் தேவையான நிதியைப் பெறவும் சிங்கள பௌத்த குடியேற்றங்களை அதிகரிக்க வைத்து ஈழத்தமிழரின் இறைமை மற்றும் தேசியம் மேலும் ஒடுக்கப்படுவதற்கான சூழல்களையே வளர்க்கும் அதனை அனைத்துலக பதற்றமான அரசியல் பொருளாதார சூழ்நிலைகள் வேகப்படுத்தும் என்பதே இலக்கின் இவ்வாரக் கருத்து.
இதனால், ஈழத்தமிழரின் ஜென்சி அல்பா இளைய தலைமுறையினர் எழுந்து உலக நாடுகளில் காணப்படுவது போன்ற சனநாயகப் போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என்ற சிறிலங்காவின் அச்சமே வரவுசெலவுத்திட்டத்தில் பாதுகாப்பு நிதியினை வழமை போலவே கடந்த வரவு செலவுத் திட்டத்தை விட அதிகமாக ஒதுக்கியுள்ளது.
கூடவே, தொல்லியல் மற்றும் வனத்துறை வழியாக ஈழத்தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்காகவே இத்துறைகளில் பாதுகாப்புச் சேவைகளுக்கான நிதியையும் வரவு செலவுத் திட்டம் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழரின் ஒருமைப்பாடு ஒன்றே ஈழத்தமிழரின் இறைமையை தேசியத்தைப் பாதுகாக்க ஒரே வழி என்பதனை இந்த மாவீரர் மாதத்திலாவது ஈழத்தமிழர்கள் உணர்ந்து செயற்பட வேண்டுமென்பதே இலக்கின் அழைப்பாகவுள்ளது.
ஆசிரியர்

ஈழத்தமிழரின் Gen Z (ஜென்சி) தலைமுறையே ஈழத்தமிழர் இறைமைக்கான ஒரே பாதுகாப்பு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 416
Ilakku Weekly ePaper 417 | இலக்கு-இதழ்-417 | சனி, 14 நவம்பர், 2026


