மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட சிவராசா அனோஜன் ஓரிரு வாரங்களில் நாடு திரும்புவார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு எதிரான வழக்கை சவூதி அரேபியாவின் அரச வழக்கறிஞர் அலுவலகம் கைவிடத் தீர்மானித்துள்ளதாகவும், அவருக்கு எதிராக சவூதி நீதிமன்றத்தில் இனி எந்த வழக்கும் இல்லை என்றும் வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தற்போது சவூதி அரேபியாவில் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஓரிரு வாரங்களுக்குள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சவூதி நீதிமன்றத்தினால் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சிவராசா அனோஜன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.



