மலையக தமிழ் மக்களுக்குச் சொந்தக் காணி உரிமையையும், கண்ணியமாக வாழ்வதற்கான வீடமைப்பு உரிமையையும் உடனடியாக உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் சார்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மகஜரொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
250,000 இற்கும் அதிகமான குடும்பங்கள் தொடர்ந்தும் சுமார் 169,000 லயன் குடியிருப்புகளில் வாழ்கின்றன. 150 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியர் காலத்தில் கட்டப்பட்ட 10 * 12 அடி கொண்ட குறுகிய வீடுகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்வது நாட்டின் பொருளாதாரத்திற்கு உழைக்கும் மக்களின் கண்ணியத்திற்கு முற்றிலும் முரணானது.
அரசாங்கம் வருடாந்தம் 50 வீடுகளை மாத்திரம் நிர்மாணிக்குமானால், அனைத்துக் குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்க பல ஆண்டுகள் தேவைப்படும். 1987 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 60,000 வீடுகளே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எனவே, வழக்கமான இந்த மெதுவான அணுகுமுறையைத் தாண்டி அவசரத் தீர்வு அவசியமாகிறது.
முதற்கட்ட நடவடிக்கையாக மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் (J.E.D.B., S.L.S.P.C) எல்கடுவ மற்றும் சிலாபம் பெருந்தோட்டங்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழு ஆகியவற்றின் கீழுள்ள அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்டக் காணிகளைப் பெருந்தோட்டக் குடியிருப்பாளர்களுக்கு எவ்விதப் பாகுபாடுமின்றி பகிர்ந்தளிக்குமாறும் வலியுறுத்துகின்றோம்.
இரண்டு நூற்றாண்டுகளாக நாட்டின் அந்நிய செலாவணிக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும்பங்களிப்பு செய்துவரும் மலையக மக்களுக்கு நிலமும் வீட்டு உரிமையும் வழங்குவது வெறுமனே அபிவிருத்தி நடவடிக்கை மட்டுமல்ல, அது சமூக நீதியின் அடிப்படையாகும். எனவே இவ்விடயத்தில் ஜனாதிபதியின் சாதகமான தலையீட்டையும் விரைவான நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கின்றோம் என்றார்.



