இலங்கை அரசாங்கம் முன்மொழிந்துள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு அமைவாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் அதில் திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளர்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் 26 ஆண்டுகளாக நடைபெற்ற கொடூரமான உள்நாட்டுப் போருக்கு முன்னரும், போரின் போதும், அதற்குப் பின்னரும் சிறுபான்மையினருக்கு எதிரான துஷ்பிரயோகங்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் மீதான அடக்குமுறைகள் உட்பட சித்திரவதைகள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்கள் போன்ற பல மோசமான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்
பெற்றுக்கொண்ட கருத்துக்களுக்கு அமைவாக, இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தின் வரைவை கவனத்தில் கொள்கின்றபோது, தடுப்புக் காவல் உத்தரவுகள், அத்தடுப்புக் காவலின் சட்டபூர்வத்தன்மை, அவசியம் மற்றும் விகிதாசாரத்தன்மை ஆகியவற்றைச் பரிசோதிப்பதுடன், விடுதலைக்கான உத்தரவைப் பிறப்பிப்பது உட்பட உடனுக்குடனான மற்றும் பயனுள்ள நீதித்துறை சார்ந்த கட்டுப்பாட்டுக்கும் மேற்பார்வைக்கும் உட்படுத்தப்பட வேண்டும்.
தடுப்புக் காவல் தொடர்பான மேன்முறையீடுகளை விசாரணை செய்யும் சுயாதீன மீளாய்வுக் குழு உண்மையிலேயே சுயாதீனமானதாக இருக்க வேண்டும்
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்குச் சட்ட ஆலோசனையைப் பெறுதல், மொழிபெயர்ப்பு வசதி, மருத்துவப் பரிசோதனை, இலவச சட்ட உதவி, குடும்பத்துடனான தொடர்பு மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உடனடி விஜயங்கள் ஆகியவை உறுதிசெய்யப்பட வேண்டும்.
வலிந்த காணாமல் ஆக்கப்படுதல்கள் மற்றும் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட தடுப்புக் காவல்களைத் தடுப்பதற்கு, தடுப்புக் காவலில் இருந்து மாற்றப்படும் இடங்கள் பதிவு செய்யப்பட்டு அறிக்கை செய்யப்பட வேண்டும்
பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணம் வேண்டுமென்றே மரணம் அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்தும் செயல்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட வேண்டும்;, வெறும் சொத்து சேதங்களை அதிலிருந்து விலக்க வேண்டும்.
கருத்துச் சுதந்திரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் பயங்கரவாத வன்முறையைத் தூண்டுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருப்பதாக மட்டுமே அமைய வேண்டும்.
இராணுவ மீறல்களின் வரலாற்றைக் கருத்திற் கொண்டு, துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்காக ஆயுதப்படைகளால் கைது செய்தல், விசாரணை செய்தல் மற்றும் சோதனையிடும் அதிகாரங்கள் ஒழிக்கப்பட வேண்டும்;, பயங்கரவாதக் குற்றங்களைத் தடுப்பதற்கான அதிகாரங்கள் பலப்படுத்தப்பட்டு நீதித்துறை மேற்பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அமைப்புகளைத் தடை செய்வதற்கான அளவுகோல்கள் மற்றும் வரம்புகள் தெளிவுபடுத்தப்பட்டு உயர்த்தப்பட வேண்டும், தடைய உத்தரவுகளுக்குக் கால வரம்புகள் விதிக்கப்பட வேண்டும், மேலும் கட்டுப்பாட்டு உத்தரவுகள் மற்றும் இடங்களைத் தடைசெய்யும் அதிகாரங்களுக்குக் ஒட்டுமொத்தக் கால வரம்புகள் விதிக்கப்பட வேண்டும்.
சட்டவிரோதமாக, சித்திரவதை அல்லது சித்திரவதைக்கு இணையான கொடுமைகள் மூலம் பெறப்பட்ட அனைத்து சாட்சியங்கள் அல்லது வாக்குமூலங்கள் சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கப்பட வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காகச் சாட்சியங்களை வெளிப்படுத்தாமை தொடர்பான உரிய சட்ட நடைமுறைகள் வலுப்படுத்தப்பட வேண்டும். ஊடகத்துறையின் அறிக்கையிடல்களுக்கான மூலங்கள், சட்டத்துறைக்கான சிறப்புரிமைகள், தொழில்முறை இரகசியத் தன்மைகள் மற்றும் மனித உரிமை கண்காணிப்பு தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்தச் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை வழிநடத்துவதற்கான ஜனாதிபதியின் அதிகாரம் வரையறுக்கப்பட வேண்டும், மேலும் இச்சட்டமூலம் அமுலுக்கு வந்த பிறகு பயங்கரவாதத் தடைச் சட்டம் இடைக்கால ஏற்பாடாகக் கூடப் பயன்படுத்தப்படக்கூடாது



