மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

நல்லாட்சி அரசின் ஆரம்பத்திலேயே சர்ச்சையை கிளப்பிய இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்கு முன்னரான கலந்துரையாடலை ஜனவரி 28 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆயம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று (02) பிரியந்த லியனகே தலைமையிலான மூவர் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் (Perpetual Treasuries) நிறுவனத்தின் பணிப்பாளர்களான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் ஜெப்ரி அலோசியஸ் உள்ளிட்ட பல சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

எவ்வாறாயினும் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அஜான் கார்திய புஞ்சிஹேவா ஆகிய இருவரும் இல்லாமலேயே வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் முன்னர் தீர்மானித்திருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது சில பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் தமக்கு இன்னமும் கிடைக்கப்பெறவில்லை என்று நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

முன்வைக்கப்பட்ட காரணங்களை கருத்திற்கொண்ட நீதிபதிகள் ஆயம் அடுத்த வழக்குத் தவணைக்கு முன்னர் பிரதிவாதிகள் தரப்பிற்குத் தேவையான ஆவணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டவாதிக்கு‌ உத்தரவிட்டது.