யாழ்ப்பாணம் செம்மணி-சித்துப்பாத்தி மயான வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ் வாராய்ச்சியானது, தசாப்தங்களாகத் தங்களின் உறவுகளின் நிழலுக்காகவும் நீதிக்காகவும் ஏங்கித் தவிக்கும் தமிழ் மக்களின் மனச்சாட்சியோடு நேரடியாகப் பிணைக்கப்பட்ட பெரும் சோகம் நிறைந்த மனிதப்பேரவலத் தின் சான்றுகள் நிறைந்த வரலாறாகும்.
கடந்த 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் தொடர்ச்சியாக, களனிப் பல்கலைக்கழகத்தின் முதுகலைத் தொல்லியல் நிறுவனத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் அனுஷா வன்னிநாயக்க ஆகியோரால் தயாரிக்கப்பட்டு, கடந்த அக்டோபர் 19 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 17 பக்கங்களைக் கொண்ட மூன்றாவது இடைக்காலச் சுருக்க அறிக்கையானது, பாதிக் கப்பட்ட தரப்பினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பாரிய கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற் படுத்தியுள்ளது.
மரணதண்டனைக் கைதியான முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, 1996 ஆம் ஆண்டு கால கட்டத்தில் தாங்கள் படுகொலை செய்து புதைத்தவர்க ளின் உடல்களும் தற்போதைய அகழ்வுகளில் இருக்கக்கூடும் என்று பகிரங்கமாக மீளுறுதிப்படுத்தியுள்ள நிலையில், மறுபுறம் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த இடைக்கால அறிக்கை, செம்மணியின் கொடூரமான குற்றவியல் உண்மைகளை மூடிமறைத்து, அதனைச் சாதாரண மயான நிகழ்வாகவும் இயற்கை அனர்த்தமாகவும் சித்திரிக்க முயலும் திட்டமிட்ட ஏமாற்று வித்தையாக வெளிப்பட்டுள்ளது.
இந்த இடைக்கால அறிக்கையின் தர்க்கரீதியான முரண்பாடுகளும், அறிவியல் பூர்வமற்ற எடுகோள்களும் ஆரம்பத்திலிருந்தே பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றன. அகழ்வாராய்ச்சியின்படி, வெறும் 513சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட குறுகிய நிலப்பரப்பிலிருந்து குறைந்தபட்சம் 574தனித்த மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரம் என்னவென்றால், மீட்கப் பட்ட எச்சங்களில் 41சதவீதமானவை குழந்தைகளும், 22சதவீதமானவை சிசுக்களுமாகும். அதாவது, தோண்டி எடுக்கப்பட்ட உடல்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை பிஞ்சுக் குழந்தைகளின் உடல்களாகும்.
ஒரு குறிப்பிட்ட சிறிய நிலப்பகுதியில் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையிலான மனித உடல்கள், அதிலும் பெரும்பான்மையாகச் சிறுவர்களும் சிசுக்களும் எவ்வாறு புதைக்கப்பட்டிருக்க முடியும்? ஆனால், பேராசிரியர் சோம வேவவின் அறிக்கை இந்தச் பயங்கரமான யதார்த்தத்தை எதிர்கொள்ளத் தவறிவிட்டு, இந்த மனிதப் பேரவலத்தைத் திசைதிருப்பும் அபத்தமான வாதங்களை முன்வைக்கிறது.
அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள மிக முக்கியமான மற்றும் ஆபத்தான அனுமானம், ‘இவ்வளவு அதிகமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டமை ஒரு தொற்று நோயினாலோ அல்லது இயற்கைப் பேரழிவினாலோ நிகழ்ந்திருக்கக்கூடும்’ என்பதாகும்.
மேலும், உயிரிழந்தோரின் தனிப்பட்ட உடைமை களைச் சேர்த்துப் புதைப்பதை விட, அவசரமாக உடல் களை அடக்கம் செய்வதே அப்போது கரிசனையாக இருந் திருக்கலாம் என்றும் அறிக்கை வாதிடுகிறது.
இது முழுக்க முழுக்க வரலாற்றுக்கு முரணான மற்றும் அடிப்படைய விஞ்ஞான அறிவியல் ஆதாரமற்ற புனைகதையாகும். யாழ்ப்பாண வரலாற்றில் குறிப்பிட்ட இந்தக் காலப்பகுதியில், ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொத்துக் கொத்தாக மாண்டுபோகும் அளவுக்கு எந்தவொரு பெருந்தொற்று நோயோ அல்லது பேரிடரோ ஏற்பட்டதாக மருத்துவ ஆவணங்களோ வரலாற்றுப் பதிவுகளோ எங்குமே இல்லை.
போர்ச்சூழலில் காணாமல்போன பல்லாயிரக் கணக்கானோரின் உறவுகள் துடிதுடித்துக் கொண்டிருக் கும் வேளையில், அரசின் பாதுகாப்பிற்காகத் தொல்லியல் அறிவியலைத் தவறாகப் பயன்படுத்தி, இத்தகைய ‘தொற்று நோய்’ என்ற தற்காப்பு வாதத்தை அறிக்கை முன்வைப்பது அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டைக் காட்டுகிறது.
அதுமட்டுமன்றி, முந்தைய அறிக்கைகளில் ‘மனிதப் புதைகுழி’ என்ற பதத்தைப் பயன்படுத்திவந்த பேராசிரியர் ராஜ் சோமதேவ, தற்போதைய இடைக்கால அறிக்கையில் வேண்டுமென்றே அந்த வார்த்தையைத் தவிர்த்துள்ளமை கவனிக்கத்தக்கது.
‘மனிதப் புதைகுழி’ என்ற பதத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக இதனையொரு சாதாரண ஒழுங்கமைக்கப் பட்ட மயானப் பயன்பாடாகக் காட்ட முயல்வது, படையினரை யும், புலனாய்வாளர்களையும் குற்றங்களிலிருந்து தப்ப வைப்பதற்கான தந்திரோபாயமாகும்.
சித்துப்பாத்தி பகுதி என்பது பாரம்பரியமாக இந்து மதச் சடங்குகளின்படி உடல்களைத் ‘தகனம்’ செய்யும் இடமே தவிர, அங்கு உடல்களைக் குழி தோண்டிப் புதைக்கும் வழமை எக்காலத்திலும் இருந்ததில்லை.
மேலும், குறிப்பிட்ட அந்த நிலப்பகுதி முறையான மயானத்துக்காக ஒதுக்கப்பட்டதற்கான சட்டபூர்வ ஆவணங் களோ அல்லது பதிவுகளோ எங்குமில்லை. அவ்வாறிருக் கையில், அதனைச் சாதாரண மயானம் என்று அறிக்கை எவ்வாறு சான்றளிக்க முடியும்?
அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் வெறும் ஒரு மீற்றர் அல்லது அதற்கும் குறைவான ஆழத்திலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளமையும், பல உடல்கள் ஒன்றின் மேல் ஒன்றாகக் குவித்து வீசப்பட்டிருப்பதும், இது எந்தவிதமான முறைசார்ந்த அடக்க முறையையும் குறிக்கவில்லை என் பதைத் தெளிவாக உணர்த்துகிறது.
மேலும், வயது வந்தவருடன் ஒரு குழந்தை இணைக்கப்பட்டவாறு ஒன்றுக்கு மேற்பட்ட எலும்புக்கூட்டு இணைப்புகள் கண்டறியப்பட்டமை மிகவும் அசாதாரண மானது. இது சாதாரணமானதொரு ஈமச்சடங்கு முறைக்குப் பொருந்தவே பொருந்தாது.
ஆபத்தான சூழலில், அவசர அவசரமாக உடல்கள் மனிதக் குப்பைகளுடன் சேர்த்து வீசப்பட்டதையே இது போன்ற சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், அறிக்கை இவற்றை மூடிமறைக்க முற்படுவது மனிதாபிமானத்தை மறந்து துறைசார்ந்த நிபுணத்துவத்துக்குச் செய்யப்படும் பெரும் துரோகமாகும்.
அதேபோன்று, உடல்களுடன் மீட்கப்பட்ட பொருட் கள் மற்றும் நாணயங்கள் குறித்த விளக்கங்களிலும் திட்டமிட்ட மழுப்பல்கள் அரங்கேறியுள்ளன. அகழ்வாராய்ச்சி யின் போது 1870ஆம் ஆண்டின் நாணயம் ஒன்று கண் டெடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, இந்த மயானம் 19ஆம் நூற்றாண்டிலிருந்தே பயன்பாட்டில் உள்ளது என்ற தவறான பிம்பத்தை உருவாக்க முயன்றுள்ளனர்.
ஆனால், அதே அறிக்கையின் மற்றொரு பகுதியில், சாம்பல் அடுக்கிலிருந்து 1920, 1944, 1963, 1975, 1978, 1982, 1991 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளைச் சேர்ந்த நாணயங்கள் மீட்கப்பட்டதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 1991 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டமை மிக முக்கியமான வரலாற்றுத் திருப்புமுனையாகும்.
ஏனெனில், 1990களின் நடுப்பகுதியில்தான் யாழ்ப் பாணத்தில் இராணுவக் கட்டுப்பாடுகள் உச்சத்தி லிருந்ததும், பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதும் நிகழ்ந்தது.
1994 ஆம் ஆண்டைய நாணயங்கள் உடல்களுடன் தொடர் புடையனவாக இருக்கும் பட்சத்தில், இந்தப் புதைப்புகள் அனைத்தும் திட்டமிட்ட படுகொலைகளின் உச்சக்கட்டக் காலமான 1990களிலேயே நடந்துள்ளன என்பதை இந்த நாணயங்களே சாட்சியமளிக்கின்றன. இருப்பினும், இந்தக் காலக்கணிப்பு உண்மைகளை அறிக்கை மேலோட்டமாகக் கடந்து செல்வது சந்தேகங்களை மேலும் வலுப்படுத்துகிறது.
செம்மணி மனிதப் புதைகுழியில் ஆடைகள் பெருமளவில் அகழ்ந்தெடுக்கப்படவில்லை என்பதை வைத்து, இறந்தவர்கள் ஆடைகள் இன்றியே புதைக்கப்பட்டனர் என்ற முடிவுக்கு வர முடியாது என்று வாதிடும் அறிக்கை, அதனை ஒரு ‘புதைபடிவச் சிதைவுசார் அவதானிப்பு’ எனக்கூறி கடந்து செல்கிறது.
மண்ணின் காரத்தன்மை மற்றும் இரசாயனப் பண்புகளால் துணிகள் உக்கிப்போயிருக்கலாம் என்பது உண்மைதான் என்றாலும், செருப்புகள், பிளாஸ்டிக் பொத் தான்கள், தாயத்துக்கள் மற்றும் இலங்கை நாணயங்கள் போன்ற நீடித்து உழைக்கக்கூடிய பொருட்கள் பலவற்றுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஒரு எலும்புக்கூட்டுடன் காலணி இணைந்திருந்தமை மற்றும் பல தனிப்பட்ட உடைமைகள் கண்டறியப்பட்டமை, அவை சாதாரணமானவர்களின் இயற்கையான மரணத்திற்கான சான்றுகள் அல்ல என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.
மரணதண்டனைக் கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ தனது வாக்குமூலத்தில், 1996ஆம் ஆண்டில் செம்மணி சோதனைச்சாவடியில் நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டதாகவும், கொல்லப்பட் டவர்களின் உடல்கள் செம்மணிப் பகுதி மற்றும் அத னைச் சுற்றியுள்ள இடங்களில் புதைக்கப்பட்டதாகவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
1999 ஆம் ஆண்டில் செம்மணியில் மேற்கொள் ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது 15 உடல்கள் மீட்கப்பட்டு உண்மைகள் வெளிவந்த வரலாறும் நம் கண்முன்னே உள்ளது. இவ்வாறான நேரடியான குற்றவியல் ஒப்புதல்களும், சாட்சிகளின் வாக்குமூலங்களும் இருக்கும் போது, பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர், பாதுகாப்புப் படையினரையும் அரச இயந்திரத்தையும் காப்பாற்றும் நோக்கத்துடன் இத்தகைய பக்கச்சார்பான இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்திருப்பது கண்டிக் கத்தக்கது.
பாதிக்கப்பட்ட தரப்பினரான வலிந்து காணாமலாக் கப்பட்டோரின் குடும்பங்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நகர்த்தல் பத்திரத்தில் கோரியுள்ளவாறு, பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இந்த இடைக்கால அறிக்கை எந்தவிதத்திலும் விஞ்ஞா னபூர்வ மற்றும் வரலாற்று உண்மைகளை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை. இது முழுக்க முழுக்கத் திசை திருப்பப்பட்ட, அரசாங்கத்தின் அழுத்தங்களுக்குப் பணிந்து தயாரிக்கப்பட்ட ஏமாற்று ஆவணமாகும்.
எனவே, இந்த இடைக்கால அறிக்கை முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும் என்பதுடன், இவ்வறிக்கையின் சர்ச்சைக்குரிய முடிவுகளை வைத்து இறுதித் தீர்ப்புக்கு வருவதைத் நீதிமன்றம் தவிர்க்க வேண்டும்.
செம்மணி மண்ணில் புதைக்கப்பட்டிருப்பது வெறும் எலும்புக்கூடுகள் அல்ல.அது தமிழினத்தின் அழிக்க முடியாத வரலாறு. அந்த வரலாற்றை மூடிமறைத்து, உண்மையை மழுங்கடிக்க முயலும் எந்தவொரு அதிகார வர்க்கத்தின் சதித்திட்டத்தையும் தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
சுதந்திரமான சர்வதேசத் தடம்சார் நிபுணர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் மட்டுமே இத்தகைய அகழ் வாராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகள் முழுமைபெற வேண்டும்; அப்போதுதான் உண்மையான நீதி வெளிச்சத்திற்கு வரும். தற்போதைய நிலையில் தாமதமின்றி அதற்கான களமமைப்பதே தமிழர்களின் எதிர்கால இருப்புக்கான முதற்படி.



