யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தின் அனுமதியின்றிய கட்டுமானங்களை உடனடியாக இடித்து அகற்றுமாறு யாழ்.மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த விடயத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவு தூபியானது, 1988ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மாநகர சபையின் அப்போதைய ஆணையாளரின் தலைமையில் மாநகர சபை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் நிதிப்பங்களிப்பில் சட்டபூர்வமாக அமைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த தூபி சட்டவிரோதமான முறையில் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்டிருந்தது.
பின்னர் 2003 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை செய்யப்பட்டதையடுத்து மீளவும் அந்த தூபி அமைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தூபி அமைக்கின்ற செயற்குழுவில் முன்னாள் ஆணையாளரான சி.வி.கே.சிவஞானமும் இருந்ததாகவும் பல தடவைகள் ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருக்கின்றார்.
இவ்வாறிருக்கின்ற போது சட்டபூர்வமாக அமைக்கப்பட்ட ஒரு தூபியை இடித்து அகற்றுமாறு யாழ். மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் உத்தரவிட்டிருப்பது பொது மக்களுடைய அடிப்படை நினைவேந்தல் உரிமையை மீறுகின்ற செயற்பாடாகும் என்று செல்வராசா கஜேந்திரன் சாடினார்.
“இந்த செயற்பாட்டை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் இனவாதத்தை பிரதி காவல்துறைமா அதிபருடைய அறிவித்தல் வெளிப்படுத்துகின்றது.
2003 ஆம் ஆண்டு இந்த தூபி மீளவும் அமைக்கப்படுகின்ற போது யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவக் கட்டுப்பாட்டிலே இருந்தது. காவல்துறையினர் இங்கே நிர்வாகத்திலே ஈடுபட்டிருந்தார்கள், அத்துடன் சமாதான உடன்படிக்கையின் பிரகாரம் தமிழீழ விடுதலைப்புலிகள் இங்கே அரசியல் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். சிவில் அமைப்புக்களினாலே தான் இந்த தூபி மீளவும் அமைக்கின்ற செயற்பாடு மேற்கொள்ளப்பட்ட போது சர்வதேச போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு இங்கே கடமையில் ஈடுபட்டிருந்தது” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அந்த தூபி அமைக்கப்பட்ட பிற்பாடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் காவல்துறையினரிடமோ, சர்வதேச போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடமோ குறித்த தூபி சட்டவிரோதமானாதோ அல்லது ஆத்திரமூட்டுவதாக இருக்கின்றதோ என்பது குறித்து எந்த முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை.
அந்த தூபி 2006ஆம் ஆண்டு போர் ஆரம்பித்த பிற்பாடு சட்டவிரோதமான முறையில் இடித்து அழிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அந்த எஞ்சியிருக்கின்ற இடத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நிதியொதுக்கீட்டின் கீழ் 2016ஆம் ஆண்டு தூபி இருக்கின்ற இடத்தைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டிருக்கின்றது.
அந்த வேலி அமைக்கப்படுவதற்கு வடக்கு மாகாண சபையிடமும் அனுமதி பெறப்பட்டிருக்கின்றது.
பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் அந்த வேலைத்திட்டம் நடைபெற்றிருக்கின்றதென்றால் ஒரு சட்டவிரோதமான இடத்திற்கு நிதியொதுக்கீடு செய்ய முடியாது.
ஒதுக்கப்பட்ட நிதி அங்கே செலவிடப்பட்டிருக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இது ஒரு சட்டவிரோதமான கட்டடம் கிடையாது. ஆகவே இது ஒரு சட்டபூர்வமான கட்டடம்.
காவல்துறையினர் இனவாதக் கோணத்தில் இதனை அகற்றுவதற்கு எடுக்கின்ற முயற்சிகளை நாங்கள் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது. யாழ்ப்பாணம் மாநகர சபை அதற்கு இடமளிக்கக்கூடாது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.



