இலங்கை மற்றும் இந்திய ஊடகச் சமூகங்களுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வரும் இலங்கை – இந்திய ஊடக நட்புறவுச் சங்கத்தின் மூன்றாவது வருடாந்த பொதுக்கூட்டம் கொழும்பில் நேற்று புதன்கிழமை (28) நடைபெற்றது.
நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இரு நாட்டு ஊடகவியலாளர்களிடையே அனுபவப் பகிர்வையும் தொழில்முறை உறவையும் வளர்ப்பதில் இச்சங்கம் ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டினார்.
குறுகிய காலத்தில் ஊடக விழா , செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிப் பட்டறை, ஆசிரியர்கள் வட்டமேசை மாநாடு போன்ற பல பயனுள்ள திட்டங்களைச் சிறப்பாக நடத்தியமைக்காகவும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சங்கம், இந்திய அரசின் அழைப்பில் இந்தியாவிற்கு விஜயம் செய்த இலங்கை ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் மக்கள் தொடர்புகளையும் மேலும் ஆழப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



