இலங்கை – இந்திய ஊடக நட்புறவுச் சங்கத்தின் புதிய செயற்குழு தலைவராக நிஷ்தார் காசிம் மீண்டும் தெரிவு

இலங்கை மற்றும் இந்திய ஊடகச் சமூகங்களுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வரும் இலங்கை – இந்திய ஊடக நட்புறவுச் சங்கத்தின் மூன்றாவது வருடாந்த பொதுக்கூட்டம் கொழும்பில் நேற்று புதன்கிழமை (28) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விசேட விருந்தினராகக் கலந்துகொண்டார். கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக எதிர்வரும் ஆண்டிற்கான புதிய செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றது. இதன்போது, அதன் தலைவராக நிஷ்தார் காசிம் மீண்டும் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
அத்துடன், ஷெஹான் பரணகே, கலாநிதி குமாரசிங்க, ரிப்தி அலி, சந்தோஷ் மேனன், தினேஷ் டி அல்விஸ், அரோஷ பெர்னாண்டோ, ரொபர்ட் அன்டனி, தில்ருக்ஷி ஹதுன்னெத்தி மற்றும் மகேஷ் பண்டார ஆகியோர் புதிய செயற்குழு உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இரு நாட்டு ஊடகவியலாளர்களிடையே அனுபவப் பகிர்வையும் தொழில்முறை உறவையும் வளர்ப்பதில் இச்சங்கம் ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டினார்.

குறுகிய காலத்தில் ஊடக விழா , செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிப் பட்டறை, ஆசிரியர்கள் வட்டமேசை மாநாடு போன்ற பல பயனுள்ள திட்டங்களைச் சிறப்பாக நடத்தியமைக்காகவும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சங்கம், இந்திய அரசின் அழைப்பில் இந்தியாவிற்கு விஜயம் செய்த இலங்கை ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் மக்கள் தொடர்புகளையும் மேலும் ஆழப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.