04. யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான தடயவியல் தொல்லியல் அகழாய்வு குழுவின் மூன்றாவது இடைக்கால அறிக்கையை ‘மக்கள் செயல்’ அமைப்பு முற்றாக நிராகரித்துள்ளதோடு, அதனை வன்மையாகக் கண்டித்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே குறித்த அமைப்பின் பிரதிநிதிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு கடந்த 2026 ஒக்டோபர் 10ம் திகதி அன்று இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சித்துப்பாத்தி தளம் முறையான புதைப்பு நடைமுறைகளுடன் அதிக ஒற்றுமை கொண்டுள்ளது என்றும், தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரிடர் காரணமாக இறந்தவர்கள் விரைவாக அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இது தமிழின அழிப்புக்கான நீதிக்கோரிக்கைகளை புதைத்தொழிக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட ஒருபக்க சார்பான மற்றும் ஊகங்களின் அடிப்படையிலான அறிக்கை என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
1995 க்குப் பின்னான இராணுவ அடக்குமுறை, சித்திரவதை முகாம்கள், அருகில் அமைந்திருந்த சோதனைச்சாவடிகள் மற்றும் கிருஷாந்தி மரணித்த சம்பவம் உள்ளிட்ட வரலாற்றுப் பின்னணிகளை தொல்லியல் குழுவினர் வேண்டுமென்றே புறக்கணித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மனிதப் புதைகுழி என்ற சொற்பதத்தை அகற்றிவிட்டு, இதனை ‘சாதாரண அடக்கம்’ எனப் பொதுமைப்படுத்துவது மக்களின் தகன நம்பிக்கைகளுக்கு முரணானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் உள்ளக பொறிமுறைகள் மூலம் நீதி கிடைக்காது என்பதால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தலையீட்டுடன் கூடிய நீதியான சர்வதேச விசாரணை பொறிமுறையொன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்.
மீட்கப்பட்டுள்ள எச்சங்கள் மீது மாதிரி பரிசோதனைகளுக்கு அப்பால், சர்வதேச மேற்பார்வை பொறிமுறையின் கீழ் உலகளாவிய நியமங்களின்படி முழுமையான கார்பன்-காலவியல் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் மக்கள் செயல் அமைப்பு தெரிவித்துள்ளது.



