ஜி.எஸ்.பி பிளஸ் (GSP+) வரிசலுகை கைநழுவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை

இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை எதிர்வரும் 2027இல் மீண்டும் புதுப்பிக்கப்படவுள்ள நிலையில், அரசாங்கத்தின் அடக்குமுறைச் சட்டங்கள் காரணமாக அந்தச் சலுகை கைநழுவிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சலுகையை இழப்பது நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தையும், குறிப்பாக ஆடைத் துறை சார்ந்த இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்று மனித உரிமை செயற்பாட்டாளர் சட்டத்தரணி தருஷி திஷாரா பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பில் சமூக மற்றும் சமய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாத முதுகெலும்பாக விளங்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் மீண்டும் புதுப்பிக்கப்படவுள்ள நிலையில், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச விதிகளுக்கு முரணான வகையில் அரசாங்கம் நடைமுறைப்படுத்த தீர்மானித்திருக்கும் ஒடுக்குமுறைச் சட்டங்கள் காரணமாக அந்தச் சலுகை இலங்கைக்குக் கிடைப்பதில் தீவிர சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த சலுகை மூலம் அதிகளவான பயன்களை பெற்றுக்கொள்ளும் உலக நாடுகளின் வரிசையில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது.

கடந்த காலங்களில் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை வழங்கப்பட்ட போது, மனித உரிமைகள், தொழிலாளர் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட சர்வதேசக் கொள்கைகளை மதித்து நடப்பதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

ஆனால், தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களை நிறைவேற்றும் போது, சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுடன் இணங்கிச் செல்லத் தவறி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக எச்சரித்துள்ளன.

இத்தகைய சூழலில், இந்தச் சலுகையை இழப்பது நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தையும், குறிப்பாக ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் சுதந்திர வர்த்தக வலயங்களை நம்பியுள்ள இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் மிக மோசமாகப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

எனவே, அரசாங்கம் தனது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும் அதிகாரத் பிரயோகத்திற்காகவும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறித்து, அவர்களை அச்சுறுத்தும் இதுபோன்ற அடக்குமுறைச் சட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பையும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேசத்தின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப நாட்டின் சட்டக் கட்டமைப்புகளை மாற்றியமைத்து, ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியது நாட்டின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது என்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் சட்டத்தரணி தருஷி திஷாரா பெர்னாண்டோ தெரிவித்தார்.