செம்மணி குறித்து நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை சுரேஷ் விமர்சனம்

04. செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பேராசிரியர் ராஜ்சோமதேவ, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள இடைக்கால அறிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தற்போதைய அரசாங்கமும் முன்னர் இருந்த ஆட்சியாளர்களையும் சம்பவத்துடன் நேரடி தொடர்புள்ள படைத்தரப்பினரையும் காப்பதற்கே முயற்சிக்கிறது” என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2026ஆம் ஆண்டிலும் 110 நாட்களாக செம்மணியில் அமைந்துள்ள சித்துபாத்தி என்ற இடத்தில் பல மனிதர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது.

அதன் போது 583 எலும்புக்கூடுகள் அங்கிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டது. அந்த அகழ்தல் பணி இன்னும் முற்றுப்பெறவில்லை. அதனைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாண நீதிமன்றம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதற்கு முன்னர் பல புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் செம்மணி புதைகுழி மிகப்பெரிய மனிதப் புதைகுழி என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இப்பொழுது சிறைச்சாலையில் மரண தண்டனைக் கைதியாக இருக்கும் சோமரட்ண ராஜபக்ச, கிருஷாந்தி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டபொழுது, அந்த பிரதேசத்தில் 400க்கும் மேற்பட்டவர்கள் கொலைசெய்து புதைக்கப்பட்டிருப்பதாகவும் தன்னால் அந்த இடங்களை அடையாளம் காட்டமுடியும் என்றும் கூறினார்.

ஆனால் அப்பொழுதிருந்த சந்திரிகா அரசாங்கமோ அல்லது பின்னர் வந்த அரசாங்கங்களோ சோமரட்ண ராஜபக்ச கூறிய புதைகுழிகள் தொடர்பாக எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

இப்பொழுது பேராசிரியர் ராஜ்சோமதேவாவால் கையளிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்ட சில விடயங்களானவை இந்த மனிதப் புதைகுழி விவகாரமும் இப்போதுள்ள அரசாங்கத்தால் மூடிமறைக்கப்படலாம் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் சுனாமிக்குப் பின்னர், மிகப்பெரிய அளவிலான இயற்கை அழிவுகளோ அல்லது கொவிட்டிற்குப் பின்னர் மிகப்பெரும் அளவிலான தொற்றுநோய்களோ ஏற்படவில்லை.

சுனாமியால் இறந்தவர்கள் கடற்கரைகளில் புதைக்கப்பட்டார்கள். அதற்கான நினைவுச் சின்னங்கள் அந்த இடங்களில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதற்கும் சித்துபாத்திக்கும் எந்த தொடர்பும் இல்லை.

அதைப்போலவே யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதும் அவர்கள் எந்த இடத்தில் புதைக்கப்பட்டார்கள் என்பதும் அரசாங்கத்திடம் அறிக்கைகளாக இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் இயற்கை அழிவு, பெருந்தொற்று காரணமாக இந்த இறப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்ற எண்ணங்களை வெளிப்படுத்துவதானது தகைமை வாய்ந்த பேராசிரியர் ராஜ்சோமதேவ போன்றவர்களின் பொறுப்புவாய்ந்த பதவிக்கு அழகானதா? என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடந்து முடிந்த யுத்தத்தில் ஏறத்தாழ 25,000 பேருக்கு மேல் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக பல்வேறுபட்ட செய்திகள் உள்ளன.

அதில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் பல நூற்றுக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர்கள், யுவதிகள், குழந்தைகள் உட்பட பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக பதிவுகள் உள்ளன.

அதுமாத்திரமல்லாமல், அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் பலவற்றில் சன்னங்கள் பட்ட காயங்களும் வெட்டுக்காயங்கள் இருப்பதாகவும் ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

தொற்றுநோயாலோ அல்லது இயற்கைப் பேரழிவாலோ தமிழ் மக்கள் குறிப்பாக சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் இறந்திருந்தால் அவர்கள் இறுதிக்கிரியையின்பின் எரிக்கப்பட்டிருப்பார்களே அன்றி புதைக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

கிறிஸ்தவ மக்கள் புதைக்கப்படுவதாக இருந்தாலும் கூட சித்துபாத்தி பிரதேசம் கிறிஸ்தவ மயானத்தைக் கொண்ட பிரதேசமுமல்ல.

ஆகவே பேராசிரியரின் கூற்று எவ்வளவுதூரம் உண்மையானது என்ற கேள்வி எழுகின்றது.

செம்மணி புதைகுழி தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை தேவை என தமிழ் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புகள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்தசூழ்நிலையில் அவற்றிற்கான எத்தகைய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படாமல் இப்பொழுது சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளானது இங்கே எத்தகைய இனப்படுகொலைகளும் இடம்பெறவில்லை என்றவிதமான தோற்றப்பாட்டை சர்வதேச சமுதாயம் மத்தியில் ஏற்படுத்த இந்த அரசாங்கமும் முயற்சிக்கிறதா? என்ற கேள்வி எழுகின்றது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாவது வலிகளைச் சுமந்து இருக்கும் தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு நியாயத்தை, நீதியை ஏற்படுத்திக்கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் அவர்களும் தமது படையினரையும் கடந்த ஆட்சியாளர்களையும் காப்பாற்றுவதிலேயே குறியாக இருக்கின்றனர் என்பது இப்பொழுது வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.