சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, கைதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
கடந்த ஜூலை முதலாம் திகதி 41 ஆயிரத்து 993 ஆகக் காணப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை, செப்டெம்பர் 30ஆம் திகதியளவில் 36 ஆயிரத்து 925 ஆகக் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று (22) உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சிறைச்சாலைகளில் நெரிசல் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகக் காணப்பட்ட அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வெளியிடுவதிலான தாமதத்தைக் குறைப்பதற்காக, வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு பணியாளர்கள் பலப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனால், கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் மாத்திரம் ஆயிரத்து 506 இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களின் கீழ், அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் தொடர்புடைய அறிக்கையைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படவுள்ளது.
அத்துடன், வழக்கு நிறைவடையும் வரை போதைப்பொருட்களை முழுமையாகப் பாதுகாத்து வைப்பதற்குப் பதிலாக, அவற்றைப் புகைப்படம் அல்லது காணொளி மூலம் பதிவு செய்து, நீதவானுக்கு அறிவித்த பின்னர் நீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு விரைவாக அழிப்பதற்கும் சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



