தியாகி திலீபன் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரிந்திருந்தும், அவரது சிலையை நிறுவ அனுமதி வழங்கியது ஏன்? என யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மதிவதனியிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு சிலை நிறுவ அனுமதி வழங்கியமை தொடர்பில், யாழ்ப்பாணம் மாநகர சபை அலுவலகத்தில் சுமார் இரண்டு மணி நேரம் முதல்வரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, சிலை நிறுவுவதற்கான அனுமதி, சிலை உருவாக்கப்பட்ட விதம், அது தயாரிக்கப்பட்ட இடம், அனுமதி வழங்கப்பட்டபோது சபையில் பிரசன்னமாகியிருந்த உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விசாரணை அதிகாரிகள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
குற்றப்புலனாய்வு பிரிவினரின் கேள்விகளுக்குப் பதிலளித்த யாழ். மாநகர முதல்வர், திலீபன் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரியும் என்றாலும், அவர் ஆயுதம் ஏந்திய போரில் உயிரிழக்கவில்லை என்றும், அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்தவர் என்பதன் அடிப்படையிலேயே அவரது நினைவாகச் சிலை நிறுவ அனுமதி வழங்கப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.
யாழ் மாநகர சபை முதல்வர் உட்பட திலீபன் சிலை விவகாரம் தொடர்பில் இதுவரை 17 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தமிழ் தரப்பிலிருந்து தங்களுக்கு அழுத்தங்கள் இருப்பதாகவும், அதன் காரணமாகவே இந்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



