சுரேஷ் சலே தொடர்பில் மேலதிக விசாரணை இடம்பெறுவதாக நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

முன்னாள் அரச புலனாய்வுத் துறைத் தலைவர் சுரேஷ் சலே மீது சந்தேகத்தின் பேரில் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக, மேலும் பல சிறப்பு விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளதாக, மூவரடங்கிய உயர் நீதிமன்ற ஆயத்தால் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று நபர்கள் தெரிவித்த வாக்குமூலம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.

குற்றவாளிகளான மில்ஹான், ரிஸ்கான் மற்றும் ஜைனுல் அப்தீன் ஆகியோர் அளித்த வாக்குமூலங்கள் விசாரணை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ், உள்ளிட்ட 8 அதிகாரிகள் சிறைக்குச் சென்று சம்பந்தப்பட்ட மூன்று கைதிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறுவதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

”இந்த வழக்கில் அசாத் மௌலானா, பொய்யான அறிக்கைகளை வெளியிடுகிறார் என்று சிலர் கூறுகிறார்கள். சுரேஷ் சலே, மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் இவ்வாறு கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

அவர் பொய்யான அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் அசாத் மௌலானா 2005 மற்றும் 2006ஆம் ஆண்டுகளிலும்கூட அரசியல் பாதுகாப்பைப் பெற்றிருந்தார்” என நீதிமன்றுக்கு மேலதிக மன்றாடியர் நாயகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீதான விசாரணை தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதியரசர் பகிரங்க நீதிமன்றத்தில் விசாரித்தார்.

இதன்போது விளக்கமளித்த மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ், “தன்னைப் பொறுத்தவரை கோட்டாபய ராஜபக்ச இந்த வழக்கில் ஒரு சக்திவாய்ந்த நபர்” என்றும், “ஆனால் விசாரணைகளிலிருந்து கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் துறை நடவடிக்கை எடுக்கும்” என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.