பாரம்பரிய மீனவர்கள் பட்டினிச்சாவுக்கு செல்லும் அளவுக்கு வறுமை– துரைராசா ரவிகரன் கோரிக்கை

வடபகுதியில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் பெரும் செல்வந்தர்களாகவும், பாரம்பரிய மீனவர்கள் பட்டினிச்சாவுக்கு செல்லும் அளவுக்கு வறுமைநிலையில் உள்ளார்கள். வடபகுதி கடற்பரப்பில் அடுத்த மாதத்தில் இருந்து தொடங்கவுள்ள இறால்படுகையில் வடபகுதி மீனவர்களுக்கு சொற்ப வருவாயேனும் கிடைக்கவேண்டுமெனில் எல்லைதாண்டி வரும் இந்திய இழுவைப்படகுகளையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்திலே, நாடு முழுவதும் அவற்றுக்கு மேலாக வன்னி மக்கள் எதிர்கொள்ளும் சமத்துவ நிலைக்குச் சவாலாகும் காரணிகள் தொடர்பிலும் இப்பேரவையில் வெளிப்படுத்தவும் இடர் களையும் தீர்வு கோரியும் இன்றைய எனது நேரத்தை இப்பேரவையில் பயன்படுத்த விளைகிறேன்.

2025ஆம் ஆண்டில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மீன் உற்பத்தி 8220.49 மெற்றிக் தொன் என அரசதரப்பு புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. வெளியுலகுக்குச் செல்லும் இவ்வாறான புள்ளிவிபரம் முல்லைத்தீவு மாவட்டத்தின் இத்தகைய மீன் உற்பத்தியால் மீனவர்களின் வாழ்வாதாரம் வலுவாக உள்ளது என்ற செய்தி தவறாகவே செல்லும் நிலை காணப்படுகிறது.

ஒருபுறம் முல்லைத்தீவின் பெரும்பகுதி கடற்கரை வெறிச்சோடிப்போய் இருக்க, பாரம்பரிய மீனவர்கள் வாழ்வாதார வலு நலிவுற்று வறுமைப்பட்டிருக்க, அரச தரப்பில் வெளிவரும் இத்தகைய புள்ளிவிபரத்தில் உலகுக்கு தவறான செய்தியையே வெளிப்படுத்தி நிற்கிறது.

இவ்வாறான புள்ளிவிபர மீன் உற்பத்தியால் மிகுந்த செல்வச் செழிப்போடு வாழ்பவர்கள், முல்லைத்தீவில் சட்டவிரோத தொழில்முறைகளால் மீன்பிடிப்பவர்களே,மீன்பிடித்துறையிலும் டிஜிட்டல் முறையை செயற்படுத்தி ஒவ்வொரு பதிவுசெய்யப்பட்ட மீனவரிடம் இருந்தும்,மீன்பிடி துறைகளில் இருந்தும் பிடிபடும் மீன் அளவை கணக்கிடும் போதே, இத்தகைய மீன் உற்பத்தி ஒட்டுமொத்த முல்லைத்தீவு மாவட்டத்தையும் பிரதிபலிக்கின்றதா என்பதை கடற்றொழில் அமைச்சு உறுதிப்படுத்தமுடியும்.

வெறிச்சோடிப்போய் இருந்த முல்லைத்தீவு மாவட்டக் கடற்கரையை கடந்த கிழமையும் நேரில் சென்று நான் பார்வையிட்டிருந்தேன். முல்லைத்தீவின் கடற்பரப்பில் மட்டுமல்ல வடமாகாணக்கடற்பரப்பு முழுவதும் இவ்வாறான சட்டவிரோத தொழில் முறைகளாலேயே அதிகளவான மீன்கள் பிடிபடுகின்றன.

சட்டவிரோதிகள் பெரும் செல்வந்தர்களாவதையும் பாரம்பரிய மீனவர்கள் பட்டினிச்சாவுக்கு செல்லும் அளவுக்கு வறுமைப்படுவதையுமே தற்போதைய கடற்றொழில் அமைச்சும் கடற்படையும் கடந்த ஈராண்டுகாலத்தில் வடகடலில் சாதித்தவை.

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலக புள்ளிவிபரத்துக்கு அமைவாக, சட்டவிரோத தொழில்முறைகள் தொடர்பில் முல்லைத்தீவில் 2025 ஆம் ஆண்டில் 136 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களிடம் இருந்து தண்டப்பணமாக 7.1மில்லியன் உரூபாய் அறவிடப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு மேமாதம் வரையான காலப்பகுதியில், 53 மீனவர் கைது செய்யப்பட்டு 1.28மில்லியன் நிதி தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது. சராசரியாக 2025 இல் மூன்று நாளுக்கு ஒரு கைது என்ற அடிப்படையிலும் 2026 இல் ஐந்து நாளுக்கு ஒரு கைது என்ற அடிப்படையிலும் கடற்றொழில் அமைச்சு சட்டவிரோதிகளை மிகவும் மெத்தனப்போக்கில் அணுகியுள்ளது.

ஒரு சட்டவிரோத தொழிலில் ஒரு நாள் மீன்பிடியில் அவர்கள் உழைக்கும் பணத்திலும் சிறிய அளவிலான தொகையே ஒரு வழக்கிற்குரிய தண்டப்பணமாகும் போது,சட்டவிரோதிகள் எவ்வாறு சட்டவிரோத தொழிலை நிறுத்தப்போகிறார்கள். திருந்தப்போகிறார்கள். சட்டவிரோத தொழில் முறைகள் ஊடாக,நூற்றுக்கணக்கான கிலோ மீன்களை ஒவ்வொரு தடவையும் பிடிக்கும் சட்டவிரோத தொழிலாளர்களுக்கு இவ்வாறான தண்டப்பணமும் தண்டனையும் போதுமானதா?

சட்டவிரோத தொழில் முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு மேலும் இறுக்கமான தண்டனைகளை வழங்கும் வகையில் சட்டத்திருத்தங்களை அரசு கொண்டு வருதல் வேண்டும்.வான்பரப்பிலும் கடலிலும் நிலத்திலுமாக போதையை கட்டுப்படுத்தும் அரசு அதே அளவு சிரத்தையை கடலில் நடைபெறும் இத்தகைய சட்டவிரோத தொழில் முறையை முற்றாக ஒழிப்பதிலும் தீவிர கவனத்தை செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், கடந்த கிழமையும் எமது மாவட்ட மீனவர்களால் எமது கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகுகள் மீன்பிடிப்பதை சான்றுப்படுத்தியுள்ளார்கள். அடுத்த மாதத்தில் இருந்து தொடங்கவுள்ள இறால்படுகையில் எங்களது மீனவர்களுக்கு சொற்ப வருவாயேனும் கிடைக்கவேண்டும் என்றால் இவ்வாறாக எல்லைதாண்டி வரும் இந்திய இழுவைப்படகுகளையும் கட்டுப்படுத்தவேண்டும்.

வடகடல் பரப்பை முழுமையாக கட்டுப்படுத்த கடற்படையால் இயலாவிட்டால், சட்டவிரோத தொழில்முறைகளையும் இந்திய இழுவைப்படகுகளையும் கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சால் இயலாவிட்டால்,அதிகாரங்களையும் கருவிகளையும் எங்கள் மீனவர்கள் வரை பரவலாக்குங்கள். ஒரு மாதத்திற்குள் இவற்றை கட்டுப்படுத்திக் காட்டுகிறோம் என்றார்.