மலையக மக்களின் சுயமரியாதையும் ‘கள்ளத்தோணி’ சொல்லாடலின் பின்னணியும் : மருதன் ராம்

இலங்கையின் பொருளாதாரத் தூண்களாகத் திகழும் மலையக பெருந்தோட்ட மக்கள், இன்றும் தங்களது அடிப்படை உரிமை சார்ந்த பிரச்சினைகளுடனும் அடையா ளச் சவால்களுடனும் போராடி வருகின்றனர். நுவரெலியா – லவர்ஸ்லீப் தோட்டத்தில் அண்மையில் வீடமைப்புப் பணியின் போது தோட்ட நிர்வாக அதிகாரி ஒருவரால் “கள்ளத்தோணி” என அங்கு பணியாற்றிய மக்கள் அவமதிக்கப்பட்ட சம்பவம், மலையக மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் பின்னணியில், அம்மக்கள் எதிர்நோக்கும் வரலாற்று மற்றும் சமூக சவால்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
கேள்வி 1. ‘கள்ளத்தோணி’ என்ற சொல் பயன்பாட்டிற்கான வரலாற்றுப் பின்னணி என்ன? அது உண்மையிலேயே சட்டவிரோதக் குடியேற்றத்தைக் குறிக்கிறதா?
பதில்: ‘கள்ளத்தோணி’ என்ற சொல், வரலாற்று உண்மை களைப் புரிந்து கொள்ளாமல் உணர்ச்சிவசப்பட்டுப் பயன்படுத்தப்படும் ஒரு தவறான அவதூறுச் சொல்லாகும். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் 1820களின் தொடக்கத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்கள் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் ஆட்சி செய்தனர். அப்போது இலங்கையில் கோப்பி மற்றும் தேயிலை தோட்டங்களை உருவாக்குவதற்காகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தொழிலாளர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அந்தக் காலப்பகுதியில் தற்காலத்தைப் போன்ற விசா அல்லது கடவுச்சீட்டு நடைமுறைகள் இருக்க வில்லை. பிரித்தானிய ஆட்சியாளர்களின் முழுமை யான அனுமதியுடனும், அவர்களின் ஏற்பாட்டிலுமே தொழிலாளர்கள் தோணிகள் (படகுகள்) மூலம் தலைமன்னாரை வந்தடைந்து, அங்கிருந்து அடர்ந்த காடுகளை அழித்து பாதை அமைத்து மலையகம் வந்தடைந்தனர். இது எந்த வகையிலும் திருட்டுத்தனமான அல்லது சட்டவிரோதமான குடியேற்றம் அல்ல. நாட்டின் பொருளாதாரத்தை உருவாக்க அதிகாரபூர்வமாக அழைத்து வரப்பட்ட மக்களை, அவர்களின் கடல்வழிப் பயணத்தை தவறாகச் சித்தரித்து ‘கள்ளத்தோணி’ என இழிவுபடுத்தும் போக்கே வரலாற்று ரீதியாகத் தொடர்ந்து வருகிறது.
கேள்வி 2. நுவரெலியா லவர்ஸ்லீப் தோட்டத்தில் நடந்தது என்ன? இந்தச் சம்பவம் உணர்த்தும் உண்மை நிலை யாது?
பதில் : லவர்ஸ்லீப் தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம், மலையக மக்கள் தமது சொந்த மண்ணிலேயே நில உரிமை மற்றும் சுயமரியாதையைப் பெற எதிர்கொள்ளும் போராட்டத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. தோட்டத் தொழிலாளி ஒருவர் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் தோட்ட நிர்வாகத்திடம் முறைப்படி அனுமதி பெற்று, அத்திவாரம் இட்டு வீடு கட்டும் பணியைத் தொடங்கியுள்ளார்.
பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி கார ணமாகப் பணியை இடைநிறுத்தி, வெளிநாடு சென்று உழைத்த பணத்தைக் கொண்டு மீண்டும் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தோட்ட உதவி முகாமையாளர், பிரதி முகாமையாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோர், நிர்வாக அனுமதி பெறவில்லை எனக் கூறி பணியை நிறுத்துமாறு வற்புறுத்தியுள்ளனர். இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போதே, நிர்வாகத் தரப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தொழிலாளர்களை “கள்ளத்தோணி” என அவமதித்துள்ளார். இச்சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி, மக்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. முறைப்படி அனுமதி கோரிய கடிதங்கள் மற்றும் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பான சுயாதீன விசாரணைக்கு கோரிக்கைகள் வலுத்துள்ளன.
கேள்வி 3. இச்சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்க ளும் சமூக ஆர்வலர்களும் முன்வைக்கும் முதன்மையான வாதங்கள் யாவை?
பதில்: இச்சம்பவம் வெறுமனே ஒரு தனிநபருக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான நிலத் தகராறு அல்ல. மாறாக, மனித உரிமை மற்றும் சுயமரியாதை சார்ந்த விடயம் எனப் பல தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் நாடாளு மன்றத்தில் இதுகுறித்து கருத்துரைக்கையில் “இது ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான அரசியல் பிரச்சினை அல்ல; மனித உரிமை சார்ந்த விடயம். தேயிலை அருந்துபவர்களுக்கு வழங்கப்படும் மரியாதை, தேயிலை பறிப்பவர்களுக்கு வழங்கப்படுகிறதா?  நாட்டின் கடினமான காலங்களில் தேயிலை ஏற்றுமதி மட்டுமே பொருளாதாரத்தைக் காப்பாற்றியது.
அப்படிப்பட்ட மக்களின் உழைப்பிற்கு வழங்கப்படும் மரியாதை ‘கள்ளத்தோணி’ என்ற சொல்லாக இருப்பது வேதனையானது” எனக் குறிப்பிட்டதுடன், அரசு வெறும் அறிக்கைகளுடன் நின்றுவிடாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதேநேரம் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களின் காணி, வீட்டு உரிமை, மனித கண்ணியம் மற்றும் சமத்துவம் தொடர்பில் நீண்டகாலமாகப் பல்வேறு பிரச்சினைகள் தொடர்கின்றன. இவ்வாறான சம்பவங்களின் போது அரசும் அதிகாரிகளும் பொறுப்புடன் செயற்பட்டு, தவறிழைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் மலையக மக்களும் வலியுறுத்துகின்றனர்.
கேள்வி 4. இலங்கையின் பொருளாதாரத்திலும் அடை யாளத்திலும் மலையக மக்களின் பங்களிப்பு எத்தகையது?
பதில்: இலங்கையின் தேசிய பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதில் மலையகத் தமிழ் மக்களின் உழைப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. இலங்கைக்கு உலகளாவிய முகவரியையும் அடையாளத்தையும் பெற்றுத் தந்த ‘சிலோன் டீ’ (Ceylon Tea) மலையக மக்களின் இரத்தத்திலும் வியர்வையிலும் உருவானதாகும். நாட்டின் சுற்றுலாத் துறையோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு வரு மானமோ இல்லாத காலகட்டத்தில், இலங்கையின் முழு மையான பொருளாதாரச் சுமையைச் சுமந்தவர்கள் இம்மக்களே ஆவர்.
காடுகளாகக் கிடந்த மலையகப் பகுதிகளை உயிரைப் பணயம் வைத்து செழிப்பான தோட்டங்களாக மாற்றிய பெருமை இம்மக்களையே சாரும். “ஒவ்வொரு தேயிலைக் கன்றிலும் எங்களது முன்னோர்களின் கைரேகை உள்ளது” எனும் கூற்றுக்கேற்ப, இந்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் அவர்களின் உழைப்பு கலந்துள்ளது. இன்று மலையக மக்களை இழிவுபடுத்துவோரும், நாட்டின் ஏனைய பகுதி மக்களும் ஏதோவொரு வகையில் இம்மக்களின் ஏற்றுமதி உழைப்பினால் கிடைக்கும் தேசிய வருமானத்தின் பலனையோ அல்லது அவர்களின் சேவையையோ அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.
கேள்வி 5. இவ்வாறான இனரீதியான அவமதிப்புகளையும் நில உரிமையின்மையையும் களை எடுப்பதற்கான நிரந் தரத் தீர்வுகள் என்ன?
பதில்: மலையக மக்கள் மீதான இழிவான சொல் லாடல்களுக்கும் உரிமை மீறல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப் பல மட்டங்களில் மாற்றங்கள் அவசியமாகின்றன. பெருந்தோட்ட மக்களுக்குத் தங்களின் சொந்த நிலத்தில் சட்டபூர்வமான காணி உரிமையும், முறையான வீட்டு உரிமையும் வழங்கப்பட வேண்டும். தோட்ட நிர்வாகங்களின் தன்னிச்சையான அதிகாரங்களைக் கட்டுப்படுத்தி, ஏனைய குடிமக்களைப் போல உள்ளாட்சி மன்றங்களின் கீழ் வீடமைப்பு உரிமைகள் பரவலாக்கப்பட வேண்டும்.
‘கள்ளத்தோணி’ போன்ற இனரீதியான அவமதிப் புச் சொற்களைப் பயன்படுத்துவோருக்கு எதிராகக் கடு மையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரச நிறுவனங்களிலும் பெருந்தோட்ட நிர்வாகங்களிலும் பணியாற்றும் அதிகாரிகளுக்கு மனித உரிமை மற்றும் சமத்துவக் கல்வியளிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். மலையக மக்களின் 200 ஆண்டுகால தியாகத்தையும் பங்களிப்பையும் நாட்டின் பாடத்திட்டங்களிலும் தேசிய தளங்களிலும் சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும். இதன் மூலமே வரலாற்று ரீதியான தவறான எண்ணக் கருத்துகள் மறைந்து, அவமதிப்புகளற்ற சுயமரியாதையுள்ள சமூக வாழ்வு உறுதி செய்யப்படும்.
மலையக மக்கள் வெறும் தொழிலாளர்கள் மட்டுமல்ல. இந்நாட்டின் பொருளாதார அமைப்பையும் அடையாளத்தையும் செதுக்கிய முதன்மைப் பங்காளிகள் ஆவர். லவர்ஸ்லீப் தோட்டத்தில் நடந்த சம்பவம் தனிநபர் சார்ந்த ஒரு கசப்பான அனுபவமாக கடந்துபோக முடியாது. அது மலையகச் சமூகம் சந்தித்து வரும் நீண்டகால மனித உரிமை மற்றும் காணி உரிமை சார்ந்த அவலங்களின் வெளிப்பாடாகும். ‘கள்ளத்தோணி’ என்ற அவதூறுச் சொல்லாடலுக்குப் பின்னால் இருக்கும் வரலாற்றுத் திரிபுகளைக் களைவதும், அம்மக்களுக்கான நில உரிமை, குடியுரிமை மற்றும் மனித கண்ணியத்தை உறுதி செய்வதும் நாட்டின் கட்டாயப் பொறுப்பாகும். அதிகார வர்க்கத்தின் இத்தகைய அலட்சியப்போக்குகளுக்கு எதிராகச் சுயாதீன மான விசாரணைகள் நடத்தப்பட்டு நியாயம் வழங்கப் படுவதோடு, மலையக மக்களின் சுயமரியாதையும் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதே ஒரு சமத்துவ சமூகத்திற் கான உண்மையான அடையாளமாக அமையும்.