அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை அனுமதிக்க முடியாது: வசந்த முதலிகே

மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோருவதும், அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பதும் ஜனநாயக உரிமைகளாகும். அவற்றைக்கூடப் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்த க்கூடிய வகையில் அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை அனுமதிக்க முடியாது என மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

‘குடிமக்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தைக் கிழித்தெறிவோம்’ எனும் தொனிப்பொருளில் நேற்று செவ்வாய்க்கிழமை (13) ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கடந்தகால அரசாங்கங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களைக் கைது செய்தும் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தியும் வந்துள்ளன. இவ்வாறான அடக்குமுறைகள் வடக்கிலும் தெற்கிலும் இடம்பெற்றுள்ளன. அவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அரசியல் இயக்கங்களில் மக்கள் விடுதலை முன்னணியும் ஒன்றாகும்.

ஆனால், கடந்த காலங்களில் இவ்வாறான அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்களே இன்று ஆட்சியில் இருக்கின்றனர். இந்நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாகப் புதிய சட்டமூலமொன்றைக் கொண்டுவருவதற்கு முயற்சிப்பது முரண்பாடானதாகும்.

இந்தச் சட்டமூலத்தின் மூலம் ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் ஒருவரைத் தடுத்து வைப்பதற்கான அதிகாரங்களை வழங்குவதற்கு முயற்சிக்கப்படுகிறது. ஒருவரைத் தடுத்து வைப்பது தொடர்பான அதிகாரம் நீதித்துறையிடமே இருக்க வேண்டும். ஆனால், நீதிமன்றத்துக்கு உரிய அதிகாரத்தை ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் வழங்குவதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிராகக் குரலெழுப்புகின்ற மக்களைத் தடுத்து வைத்து அடக்குவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது.

அத்துடன், இந்தச் சட்டமூலத்தில் பயங்கரவாதம் என்பதற்கு வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணமும் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கையை முன்வைப்பது, அரசாங்கம் ஒன்றைச் செய்ய வேண்டாம் எனக் கோருவது அல்லது ஒன்றைச் செய்யுமாறு வலியுறுத்துவது போன்ற செயற்பாடுகளைக்கூடப் பயங்கரவாதமாகக் கருதக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது.

சர்வதேச அமைப்புகளிடம் கோரிக்கைகளை முன்வைப்பது, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பது, எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துவது, வேலைநிறுத்தங்களில் ஈடுபடுவது போன்ற செயற்பாடுகளையும் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தக்கூடிய வகையில் இந்தச் சட்டமூலம் அமைந்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வாக்களித்த மக்கள் ஜனநாயகத்தை நம்பியே அவருக்கு ஆதரவளித்தனர். அவ்வாறு ஜனநாயகத்தை நம்பி வாக்களித்த மக்கள், இன்று அரசாங்கம் இவ்வாறான சட்டமூலத்தைக் கொண்டுவந்து எதிர்ப்புப் போராட்டங்களை ஒடுக்க முயற்சிக்கும்போது, அதுவும் ஜனநாயகம்தானா எனக் கேள்வி எழுப்ப வேண்டும்.

அனைவருக்கும் சட்டம் சமமானது என அரசாங்கம் கூறுகின்றபோதிலும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்குச் சாதகமாகச் சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகின்றது. ஆட்சியாளர்கள் தமது அதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் மேலும் அதிகரித்துக்கொள்வதற்கும் இவ்வாறான சட்டங்களைக் கொண்டுவருவதாகத் தோன்றுகிறது.

இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், மக்கள் தமது உரிமைகளுக்காகக் குரலெழுப்ப முடியாத நிலைமை ஏற்படலாம். தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. மாணவர் போராட்டங்களை நடத்த முடியாது. சம்பள அதிகரிப்பைக் கோர முடியாது. கிராமமொன்றில் குப்பைப் பிரச்சினை ஏற்பட்டால் அதற்குத் தீர்வு கோருவதற்கும், பாடசாலையொன்று மூடப்பட்டால் அதனை மூட வேண்டாம் என வலியுறுத்துவதற்கும்கூட மக்கள் அச்சப்பட வேண்டிய நிலை உருவாகலாம்.

இவ்வாறான அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோருவதும், அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பதும் மக்களின் ஜனநாயக உரிமைகளாகும். அவற்றைக்கூடப் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தக்கூடிய சட்டமொன்றை அனுமதிக்க முடியாது. எனவே, இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும்.

கடந்த காலங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட அரசியல் இயக்கமான மக்கள் விடுதலை முன்னணியில் முன்னர் அங்கம் வகித்தவர்களும் தமது வரலாற்றை மறந்துவிடக்கூடாது. கடந்த கால அடக்குமுறைகளை நினைவில் கொண்டு, உண்மையான ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக இந்தச் சட்டமூலத்தை இரத்துச் செய்யும் கோரிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும்.

மக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்காக இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.