சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான அனோஜன் சிவராசா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்கு இலக்கான அனோஜனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் அனோஜன் தொலைபேசி ஊடாக தங்களை தொடர்பு கொண்டு தகவல் வழங்கியுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் கூறினர்.
இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சு மற்றும் துறைசார் திணைக்களங்களுக்கு இந்த விடயம் தொடர்பில் உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அனோஜனின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் அனோஜனின் விடுதலை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சவுதிக்கு சென்றுள்ள இலங்கை குழுவினரிடமும் இந்த விடயம் குறித்து தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அனோஜனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் அனோஜனின் உயிரை பாதுகாத்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையை விரைந்து செயற்படுத்துமாறு அனோஜனின் குடும்பத்தினர் உருக்கமான கோரிக்கை விடுக்கின்றனர்.



