ஈரானிய கப்பல் விவகாரத்தில் இலங்கையின் மீது அழுத்தம் இருப்பதை ஒப்புக்கொண்ட அரசாங்கம்!

இலங்கைக் கடல் எல்லைக்கு அருகில் உள்ள ஈரானியக் கப்பல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானிக்கும்போது, நாட்டின் தேசிய நலன்கள், பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவை முதன்மையாகக் கருத்தில் கொள்ளப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

குறித்த ஈரானியக் கப்பல்கள் தற்போது இலங்கையின் 12 கடல் மைல் பிராந்தியக் கடல் எல்லைக்குள் இல்லை என்றும், அவை சர்வதேச கடற்பரப்பில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, அமெரிக்காவினால் இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், எந்தவொரு வெளிநாட்டுத் தரப்பினரின் அழுத்தத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இலங்கை தனது தீர்மானங்களை மேற்கொள்ளாது என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தேசிய நலன், பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அரசாங்கம் இந்த விவகாரத்தில் தீர்மானம் எடுக்கும் என்றும் அமைச்சரவை பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.