ஞானசார தேரரின் காவியுடை அகற்றப்பட்டமை சர்ச்சை!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பான வழக்கை எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இன்று (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிடியாணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஞானசார தேரர், சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைச்சாலை உடையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதிபதி, குறித்த வழக்கை எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, பௌத்த துறவியொருவருக்கு காவி உடையை அணிவிப்பது மற்றும் அவரது காவி உடையை அகற்றுவது தொடர்பான முழுமையான அதிகாரம், குறித்த தேரருக்கும் அவர் சார்ந்த மகா சங்க சபைக்கும் மாத்திரமே உள்ளதாக ஸ்ரீ தர்ம மகா சங்க சபையின் உபநாயக்க தேரர், அக்கமஹா பண்டிதர் பேராசிரியர் கோட்டபிட்டியே ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள வழிமுறைகளுக்கு அமைய, இவ்வாறான சாசன ரீதியான நடவடிக்கை, சம்பந்தப்பட்ட மகா சங்க சபையின் மகாநாயக்க தேரரின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்திகள் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயங்களைத் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும், நீதிமன்றத்தின் உயரிய அதிகாரத்தை தாம் முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், சிறைச்சாலையில் ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதாக வெளியாகியுள்ள சில ஊடகச் செய்திகளை தாம் அவதானித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, ஞானசார தேரரின் காவி உடையை அகற்றாமல், அவர் காவி உடையுடன் நீதிமன்றம் உள்ளிட்ட வெளிப்புற இடங்களுக்கு முன்னிலையாகுவதற்கான வாய்ப்பை வழங்குமாறும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பௌத்த மத விவகார ஆணையாளர் நாயகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.