மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் 1500 நாட்களை கடந்துள்ள போதிலும் நிரந்தர தீர்வில்லை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்கள் தமது நியாயமான கோரிக்கைகளுக்காக 1,500 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியான வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இருந்த போதிலும், இதுவரை அவர்களுக்கு எவ்வித நிரந்தரத் தீர்வும் வழங்கப்படாமல் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எந்தவொரு பிரதேச செயலகப் பிரிவிலும் ‘திபுலபொத்தானை’ என்ற பெயரில் கிராமம் எதுவும் கிடையாது. எனினும், தற்போது பெரியமாதவனைப் பகுதியானது ‘திபுலபொத்தானை’ என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல நூற்றாண்டுகளாகத் தமிழ்ப் பண்ணையாளர்களால் பாரம்பரிய மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த மயிலத்தமடு – மாதவனைப் பகுதிகள், தற்போது சேனைப் பயிர்ச்செய்கை என்ற போர்வையில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

அங்கு மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதோடு, பண்ணையாளர்களை அப்பகுதியிலிருந்து அச்சுறுத்தி வெளியேற்றும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நல்லிணக்கம் என்ற பெயரில் இரு தரப்பினரையும் ஒரே மேய்ச்சல் நிலத்தைப் பயன்படுத்த அனுமதிப்பது, பண்ணையாளர்களை அப்பகுதியிலிருந்து படிப்படியாக நிரந்தரமாக வெளியேற்றுவதற்கான ஒரு மறைமுக நடவடிக்கையாகவே அமையும் என தர்மலிங்கம் சுரேஷ் எச்சரித்துள்ளார்.

இந்தநிலை தொடருமானால், அப்பகுதியின் பாரம்பரியக் கால்நடை வளம் பெருமளவில் அழிவடையும் அபாயம் காணப்படுகிறது.

அத்துடன், பண்ணையாளர்களின் இந்த நியாயமான உரிமைப் போராட்டத்தை பல்வேறு தரப்பினரும் தமது சுயநல அரசியல் மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டதால், பண்ணையாளர்களின் கோரிக்கைகள் மலினப்படுத்தப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

எனவே, மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தையும், அப்பகுதியின் கால்நடை வளத்தையும் பாதுகாக்கும் வகையில், அரச தரப்பு உடனடியாக தலையிட்டு நிரந்தரமானதும் நியாயமானதுமான தீர்வை வழங்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.