தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை அகற்றம் ‘அம்பலப்படும் மூன்றாந்தர அரசியலும் நினைவேந்தல் உரிமைக்கான தடையும்’ : விதுரன்

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் இழந்த உறவினர்களையும் தியாகிகளையும் தடை யின்றி நினைவுகூருவதற்கான உரிமை முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்று, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கையில் ஐ.நா. மனித உரி மைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் மிகத் தெளிவாக வலியுறுத்தியுள்ளார்.
எனினும், ஐ.நாவின் சர்வதேசப் பரிந்துரைகளையும் தமிழ் மக்களின் பண்பாட்டு மற்றும் அரசியல் உரிமை களையும் அப்பட்டமாக நிராகரிக்கும் வகையிலேயே நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் பலவந்தமாக அகற்றப்பட்ட சம்பவம் அமைந்திருக்கின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதில்லை என்றவாறான போலியான தோற்றப்பாடு தென்னிலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் காண்பிக்கப்பட்டு வந்தது.
ஆனால், அந்தத் தோற்றப்பாடு முற்றிலும் பொய் யானது என்பதையும், தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக் கப்பட்ட ஒடுக்குமுறை புதிய ஆட்சியிலும் தொடர்கிறது என்பதையும் ஐ.நாவின் அறிக்கையும், தற்போது நல்லூ ரில் இடம்பெற்ற சம்பவமும் தெட்டத்தெளிவாக அம்பலப் படுத்தியுள்ளன.
நிகழ்வுகளின் பின்னணியும் பொலிஸாரின் அராஜகமும்யாழ். நல்லூரில் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் பெருந் திரளான மக்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டன.
இந்நினைவேந்தலை முன்னிட்டு நினைவிடத்தில் திலீபனின் உருவச்சிலை வைக்கப்பட்டிருந்தது. 12 நாட்களாக நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றபோது, பொலிஸார் ஒலிபெருக்கிகளைப் பறிமுதல் செய்ததைத் தவிர வேறு பெரிய இடையூறுகளை ஏற்படுத்தியிருக்கவில்லை. ஆனால், நினைவேந்தல் நிகழ்வுகள் நிறை வடைந்த மறுநாளான செப்டெம்பர் 27ஆம் திகதி காலை 6.30 மணியளவில், இரண்டு வாகனங்களில் வருகை தந்த 15-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள், நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினருக்கு எவ்வித முன்னறிவித்தலும் வழங்காமல், அராஜகமான முறையில் பாதணிகளுடன் சென்று அச்சிலையைப் பலவந்தமாக எடுத்துச் சென்றுள் ளனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்து நல்லூர் நினைவா லயத்திற்கு முன்பாக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து பாரிய கண்டனப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அநுர அரசாங்கத்தின் இரட்டை வேடம் கலைந்து விட்டது என்றும், பொலிஸாரின் அராஜகம் ஒழிய வேண்டும் என்றும் கோஷமிட்ட போராட்டக்காரர்கள், திலீபனின் சிலை மீள நிறுவப்படும் வரை தமது போராட்டம் தொடருமென எச்சரித்தனர்.
சிலை அகற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அரசாங்கமும் பொலிஸ் தரப்பும் தங்களின் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வகையிலேயே முரண்பாடான விளக்கங்களை அளித்து வருகின்றன.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இச்சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், மாநகர சபையும் பொலிஸாரும் தங்களின் எல்லைக்குட்பட்ட பணிகளைச் சரியாகச் செய்யாததன் விளைவே இது என்றும் கூறி அரசாங்கத்தைக் காப்பாற்ற முற்பட்டார்.
ஆனால், அரசாங்கப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, தடை செய்யப்பட்ட அமைப்பின் சிலையை வைப்பது சட்ட விரோதம் என்றும், நீதிமன்றத்தில் முறையிட்ட பின்னரே பொலிஸாரால் இந்தச் சிலை அகற்றப்பட்டதாகவும் கூறு கிறார்.
அதேபோல பொலிஸ் பேச்சாளர் எஃப்.யூ. வூட்லர், தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் ஒருவரை நினைவுகூரும் வகையில் ‘எல்லான் படை’ என்ற குழு செயற்படுவதாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையி லும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாது காக்கவும், யாழ். மாநகர சபையினால் செப்டெம்பர் 26 வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்ததாலும் சிலை அகற்றப் பட்டதாக நியாயப்படுத்துகிறார்.
அரசாங்கத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை எனில், பொலிஸாரின் நடவடிக்கைக்கு அரசாங்கப் பேச்சா ளர் ஏன் முட்டுக் கொடுக்க வேண்டும்? பொலிஸார் தனித்து விளக்கம் அளித்திருக்க வேண்டிய விடயத்தில், அரசாங்கம் தலையிட்டுப் பேசுவதே இதில் அரசின் நேரடிப் பின்னணி இருப்பதை உறுதி செய்கிறது.
அமைச்சரும் பொலிஸாரும் கூறுவது போல திலீபன் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்பது இங்கு முக்கியத்துவம் பெறும் விடயமாகும். 1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னர் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்துத் தமிழ் இயக்கங்கள் மீதான தடையும் நீக்கப்பட்டு, ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் அப்போதைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவினால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை நீக்கப்பட்டிருந்த அந்தச் சூழலில்தான், திலீபன் அகிம்சை வழியில் ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீராகாரமு மின்றி உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்தார்.
அவர் ஒரு ஆயுதப் போராளியாகப் போர்க்களத்தில் உயிரிழக்கவில்லை. மாறாக, காந்திய வழியில் தன்னுயிரை ஈகம் செய்தார். உயிரிழந்தபோது பயங்கரவாதியாகவோ அல்லது தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராகவோ இல்லாத ஒருவரை, பல தசாப்தங்களுக்குப் பிறகு ‘தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்’ என முத்திரையிட்டு அவரது சிலையை அகற்றுவது எந்த வகையில் சட்டபூர்வ மானதாகும்?
இதேநேரம், ஆட்சியில் அமர்ந்துள்ள ஜே.வி.பி. தனது சொந்த வரலாற்றை மறந்து செயற்படுகிறது. ஏனெனில் ஜே.வி.பி. இருமுறை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அதன் தலைவர் ரோஹண விஜேவீர கொல்லப்பட்டபோது, ஜே.வி.பி. ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பாகும். அவர் ஒரு பயங்கரவாதியாகவே அறிவிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், ஜே.வி.பி. மீதான தடை நீக்கப்பட்ட பின் னர், ரோஹண விஜேவீரவுக்கு சிலைகள் வைக்கப்பட்டு, ஆண்டுதோறும் நினைவேந்தல்கள் பிரமாண்டமாக நடத்தப்படுகின்றன. தடை அமுலில் இருந்தபோது கொல்லப் பட்ட தமது தலைவரைத் தடை நீங்கிய பின் கொண்டாட முடிகிறது என்றால், உயிரிழந்தபோது தடையே இல்லாத ஒரு அமைப்பில் அஹிம்சை வழியில் உயிர்நீத்த திலீபனுக்கு ஏன் சிலை வைக்க முடியாது?
இச்சம்பவத்தையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் அதன் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தையும் கடுமையாகச் சாடியுள்ளார். தமிழரசுக் கட்சியும் அநுர அரசாங்கமும் இணைந்தே இந்தச் சிலையை அகற்றியதாக அவர் குற்றம் சாட்டினார்.
எனினும், இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள யாழ். மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா மற்றும் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர், மாநகர சபைக் கூட்டத்தில் 26-09-2026 வரை தற்காலிகமாகவே சிலை வைப்பதற்கு அனுமதி கோரப்பட்டதாகவும், அதனடிப்படையில் சபை யின் ஏகோபித்த ஆதரவுடன் தற்காலிக அனுமதி வழங்கப் பட்டதாகவும் விளக்கமளித்துள்ளனர்.
மேலும், பொலிஸார் தொடர்ச்சியாக நெருக்குதல் அளித்து, சிலையை அகற்றுவதாக எழுத்துமூல உறுதிமொழி கேட்டபோதும் தாம் அதை வழங்கவில்லை என்றும், சிலை அகற்றப்பட்டதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் மாநகர சபை முதல்வர் தெரிவித்துள்ளார்.
மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் ‘நினை வுத் தூபி அமைத்தல் என்பது நாட்டின் இறையாண் மையுடன் தொடர்புடைய விடயம் என்பதால் சபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது’ என்று 2025ஆம் ஆண்டு கடிதம் திலீபனின் 38ஆவது நினைவேந்தலுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டபோது இதே மாநகர சபையின் முதல்வர் தான் கடிதம் மூலம் நிராகரித்திருக்கின்றார்.
இந்தப் பின்னணியில், ‘தற்காலிக அனுமதி’ என்ற கோரிக்கையைக்கூட சிலையை வைத்து விட்டுத்தான் கோரியதாகவும், அதனை நிராகரித்தால் தமிழரசுக் கட்சி அம்பலப்படும் என்றும் முன்னணியினர் வாதம் செய்கின்றனர்.
அதில் நியாயம் இல்லாமலும் இல்லை. ஏனென் றால் கொண்டுவந்து வைத்த சிலையை மீள அனுப்ப வேண்டாம் என்று சி.வி.கே. சிவஞானம் யாழ். மாநகர முதல்வருக்கு அறிவுரை அளித்துள்ளார். அது பொதுவெளி யில் வெளிப்படுத்தப்பட்டும் உள்ளது.
எவ்வாறாயினும், தற்காலிக அனுமதி வழங்கப் பட்டதன் பின்னர் கால எல்லை முடிந்த கையோடு பொலி ஸார் பாய்ந்து சென்று சிலையை அகற்றியுள்ளனர். அது மட்டுமன்றி, மாநகர சபையும் தனக்கு பொலிஸாரின் அழுத்தங்கள் அதிகரித்த தருணத்தில் தற்காலிக அனுமதி தான் வழங்கப்பட்டதாகப் பதிலளித்து நழுவியிருக்கின்றது.
ஆகவே, தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசிய முன்னணியும் திலீபனின் உருவச்சிலை விடயத்தில் யார் யாரை விஞ்சுவது என்ற மனப்பான்மையுடன் தாராளமாகவே இருக்கின்றார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
அதனைவிட, தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் திலீபனுக்கு முதலில் சிலை அமைத்தவர் நானே என்றும், அதன்பின்னரே தான் சுடப்பட்டதாகவும் கூறுகின்றார். தொடர்ந்து போரின் நிறைவின் பின் னரான காலத்தில் தமது சிறிதரனும், சுமந்திரனும் பன் முகப்படுத்தப்பட்ட நிதியில் நினைவாலய வளாகத்தைப் புனரமைத்தார்கள் என்றும் அக்கட்சியினர் கூறுகின்றார்கள்.
இதில் என்ன தவறிருக்கின்றது, திலீபன் என்ற இளைஞன் தனது சொந்த நலனுக்கான உண்ணாநோன்பு இருக்கவில்லை. ஊனை உருக்கவில்லை. நீராகாரமின்றி சாவைத்தழுவவில்லை. தமிழர் தேசத்துக்காக, தமிழ் மக்களுக்காகவே தன்னுயிரைத் துச்சமென மதித்து துறந்தார்.
அவர், தன்னுயிரை ஈகம் செய்தமையால்தான், மக்கள் பிரதிநிதிகளாகவும், அரசியல்வாதிகளாகவும் இன்று சமூகத்தில் ஊடாட்டம் செய்வதற்கான இடைவெளிகூட ஏற்பட்டிருக்கின்றது என்பதை மறந்துவிடக்கூடாது. அத் தகைய ஒரு தியாகிக்கு ‘அதைச் செய்தேன், இதைச் செய் தேன்’ என்று கூறுவதும், அத்தியாகச் செம்மலை வைத்து அரசியல் செய்ய முற்படுவதுமே அடிப்படை அறம் தவறிய செயற்பாடாகும்.
மேலும், தமிழர்களின் நினைவேந்தல் விவகாரத்தை அரசாங்கம் சட்ட ரீதியான சிக்கலாக மாற்றாமல், அரசியல் ரீதியாகக் கையாண்டிருக்க வேண்டும். முந்தைய சந்திரிகா மற்றும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கங்கள் திலீபனின் நினைவுத்தூபியை இடித்துத்தள்ளின.
தற்போதைய அநுரகுமார திசாநாயக்க தலைமை யிலான அரசாங்கமும் அதே பேரினவாதப் பாதையிலேயே பயணிக்கிறது என்பதை இச்சம்பவம் நிரூபித்துள்ளது. வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரத்தில் ஜே.ஆர். ஜயவர்த் தன அரசியல் தீர்மானத்தை எடுத்தபோது, ஜே.வி.பி. நீதி மன்றத்திற்குச் சென்று சட்ட ரீதியாக அதனைப் பிரித்தது.
அதேபோலவே இப்போதும், சட்ட ரீதியான இடுக்குகளைப் பயன்படுத்தி தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைப் பறிக்க முற்படுகிறது. தென்னிலங்கைச் சிங்கள பௌத்த வாக்காளர்களின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோம் என்ற அச்சத்தினால், அரசாங்கம் பொலிஸாரையும் நீதி மன்றத்தையும் கேடயமாகப் பயன்படுத்துகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில், சட்டத்தின் இறுக்கமான விதிகளுக்குள் நினைவேந்தலை முடக்காமல், அரசியல் ரீதியாகவும் மனித உரிமை ரீதியாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் நினைவேந்தல் உரிமை மதிக்கப்பட வேண்டும் என்றே வலியுறுத்தியிருந் தார்.
ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐ.நா. அறிக்கையின் பரிந்துரைகளை மட்டுமன்றி, தமிழ் மக்களின் அடிப்படைச் சுதந்திரத்தையும் அப்பட்டமாக நிராகரிக்கிறது என்பதையே தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்ட சம்பவம் தெட்டத்தெளிவாக உணர்த்துகின்றது.
அப்படியிருக்கையில், அரசியல்வாதிகளும் பிரிந்து நின்று முட்டுப்பட்டுக்கொண்டிருப்பது தமிழின ஒடுக்கு முறையை கையாளும் அரசாங்கத்துக்கு மேலும் வசதியா கவே அமைகின்றது. ஆகவே, தியாக தீபத்தின் நோக்கங்கள் இன்னமும் அடையப்படவில்லை. அந்தத் தியாகத்தின் இலக்குகளுக் காக இன்னமும் போராட வேண்டியுள்ளது. அதுவரையில் பார்த்தீபன் பசியோடுதான் இருக்கிறான் என்பதைத் தவறி யேனும் மறந்து செயற்படுதல் மூன்றாந்தரமானது.