கொழும்பு, ஒக்டோபர் 1: 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு, கடந்த ஆண்டு 5 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த போதிலும், நாட்டின் முதலீட்டுச் சூழல் தொடர்ந்தும் சவால்களுக்கு உட்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
‘2026 Investment Climate: Sri Lanka’ என்ற அறிக்கையில், 2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் 3 பில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தில் அரசாங்கம் தொடர்ந்துள்ள அர்ப்பணிப்பு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப் பிடப்பட்டுள்ளது. எனினும், சந்தைத் திறந்த தன்மை தொடர்பில் அரசாங்கத் தரப்பிலிருந்து வெளியாகும் முரண்பட்ட தகவல்கள் காரணமாக முதலீட்டாளர்கள் இன்னமும் எச்சரிக்கையுடன் இருப் பதாக அறிக்கை கூறுகிறது.
2025ஆம் ஆண்டு இலங்கையின் அந்நிய நேரடி முதலீடு 1.06 பில்லியன் அமெரிக்க டொலராகவும், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ஒரு சதவீதமாகவும் இருந்தது. உற்பத்தி, துறைமுக அபிவிருத்தி, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், BPO மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவை அதிக முதலீட்டை ஈர்த்த துறைகளாகும்.
கொள்கை நிலைத்தன்மை, ஒழுங்குமுறைச் சீர்திருத்தம், திறன்மிக்க தொழிலாளர்கள், தொழில்துறை நிலத்துக்கான அணுகல், திறமையான தளவாட வசதிகள் மற்றும் வர்த்தக நடை முறைகளை எளிமைப்படுத்துதல் ஆகியவற்றில் கூடுதல் கவனம் தேவை என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், ஒழுங்குமு றைகளின் கணிக்க முடியாத தன்மை, அதிகாரத்துவத் தடைகள், சட்ட நிச்சயமற்ற தன்மை மற்றும் வெளிப்படைத் தன்மைக் குறைபாடுகள் முதலீட்டுக்கு தடையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டுச் சபை பல்வேறு அரச நிறுவனங்களுக்கிடையே அதிகாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால் ‘ஒரே இடச் சேவை’ முறையில் திறம்பட செயற்பட முடியாத நிலை இருப்பதாகவும், இதனால் அனுமதி நடைமுறைகள் தாமதமடைவதாகவும் அறிக்கை கூறுகி றது. அரசுக்குச் சொந்தமான எரிசக்தி நிறுவனங்களின் செயற்றிறன் குறைபாடுகளும் தொழில்துறைக்கு செலவு குறைந்த எரிசக்தி வழங்குவதில் தடையாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சினோபெக்கின் 3.7 பில்லியன் டொலர் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம் நிலுவையில் இருப்பதும், அதானி குழுமம் 400 மில்லியன் டொலர் காற்றாலைத் திட்டத்திலிருந்து விலகியதும் முதலீட்டுச் சூழலில் நிலவும் சவால்களுக்கு உதாரணங்களாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், வர்த்தக வசதிப்படுத்தல், எண்ணிமமயமாக் கல் மற்றும் வலுவான நிர்வாகக் கட்டமைப்புகள் உள்ளிட்ட கட்ட மைப்புச் சீர்திருத்தங்கள் அவசியம் என அமெரிக்க அறிக்கை வலியுறுத்துகிறது.



