அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றின்படி, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஒன்பது இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன், அவர்களது இழுவைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவுக்குத் தெற்கே இலங்கை கடல் எல்லைக்குள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டியதற்காக மீனவர்கள் நேற்று முந்தினம் (03) மாலை கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை துறைமுகத்திற்குக் கொண்டு சென்றதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வளத் துறையிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
பாக் நீரிணையில் மீன்பிடித்தல் தொடர்பாக இந்தியா மற்றும் இலங்கை இடையே நீண்டகாலமாக நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டையும் இலங்கையையும் பிரிக்கும் குறுகிய நீர்ப்பரப்பான பாக் நீரிணை, இரு நாட்டு மீனவர்களுக்கும் வளமான மீன்பிடிப் பகுதியாகத் திகழ்கிறது.
இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் ஒருவருக்கொருவர் கடல் எல்லைகளைத் தாண்டிச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர்.



