ஈரான் போரால் அதிகரித்துள்ள எரிபொருள் விலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவின் அழுத்தத்தைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் அவசரகால டீசல் கையிருப்பிலிருந்து ஒரு பகுதியை வெளியிடுவது குறித்து பரிசீலித்துள்ளன.
பிரான்ஸ் முன்வைத்துள்ள திட்டம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வெள்ளிக்கிழமை தொலைபேசி வழியாக விவாதித்ததாக, விடயத்தை அறிந்த மூன்று வட்டாரங்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் ஐரோப்பிய நாடுகள் 50 மில்லியன் பீப்பாய் டீசலையும், சர்வதேச எரிசக்தி முகமை (IEA) உறுப்பு நாடுகள் 50 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயையும் கையிருப்பிலிருந்து வெளியிட வேண்டும் என முன்மொழியப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், எரிபொருள் விலையைக் குறைக்கும் நோக்கில் அவசரகால கையிருப்புகளை விரைவாக வெளியிடுமாறு ஐரோப்பிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்திருந்தார். இதன்படி, டீசல் கையிருப்பின் ஒரு பகுதியை 20 நாட்களுக்குள் வெளியிடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதேவேளை, அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக டீசல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கக் கூடாது என்ற உறுதிமொழியை எந்தவொரு உடன்பாட்டுக்கும் நிபந்தனையாக முன்வைப்பது குறித்தும் ஐரோப்பிய நாடுகள் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டது.
உலகளாவிய டீசல் விநியோகம் தற்போது பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் போர், உக்ரைன் தாக்குதல்களால் ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் ரஷ்யாவின் ஏற்றுமதித் தடைகள் ஆகியவை விநியோகத்தைப் பாதித்துள்ளன. சீன சுத்திகரிப்பு நிறுவனங்களும் உள்நாட்டு கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில் ஒக்டோபர் மாத எரிபொருள் ஏற்றுமதியை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கையிருப்பு வெளியீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெளியானதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை எண்ணெய் விலைகள் 2 சதவீதத்துக்கும் அதிகமாகவும், ஐரோப்பிய எரிவாயு எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் சுமார் 5 சதவீதமும் சரிந்துள்ளன.



