வலுவாகத் தடம் பதிக்கும் அமெரிக்காவின் நகர்வு : கரிகாலன்

இந்தியப் பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ள இலங்கையின் மூலோபாயப் புவிசார் அரசியல் முக்கியத்துவம், உலக வல்லரசுகளின் கவனத்தை எப்போதும் தன் பக்கம் ஈர்த்தே வந்துள்ளது.
சர்வதேச கடல்சார் வர்த்தகப் பாதைகளின் மையப் புள்ளியாகத் திகழும் இலங்கையில், தனது இராணுவ, பொருளாதார மற்றும் இராஜதந்திர ஆதிக்கத்தை வலுப் படுத்துவதில் அமெரிக்கா நீண்டகாலமாகத் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றது.
அண்மைக்காலமாக இலங்கையில் அமெரிக்கத் தூதரகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சி யான நகர்வுகள், புதிய உயர் அதிகாரிகளின் வருகை, பாதுகாப்புப் பயிற்சிகள் மற்றும் சமூக மட்டத்திலான திட்டங்கள் ஆகியவை, இலங்கைத் தீவில் அமெரிக்கா தனது ‘பிடி’யை எந்தளவுக்கு இறுகச்செய்ய முயல்கிறது என் பதைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைவதற்குள்ளாகவே, தூதரகத்தின் பிரதிப் பிரதானியாக டேவிட் மயர்ஸ் வருகை தந்துள்ளமை அமெரிக்காவின் இராஜதந்திர முன்னுரி மையை உணர்த்துகிறது.
தூதரகத் தலைமைத்துவத்தில் மிக விரைவாக மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றங்களும், அதனைத் தொடர் ந்து தொடர்ச்சியாக நடத்தப்படும் உயர்மட்ட நிகழ்வுகளும் தற்செயலானவை அல்ல.
அமெரிக்காவின் உலகளாவிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் முகமாக, இலங்கை அரசாங்கத்துடனும் அதன் முக்கிய நிறுவனங்களுடனும் மிக நெருக்கமான உறவைப் பேணுவதையே இந்த இராஜதந்திர நகர்வுகள் முதன்மை இலக்காகக் கொண்டுள்ளன.
இதனொரு அங்கமாக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான கூட்டாட்சி புலனாய்வுப் பணியகம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறைப்பு முகவரமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்கள் இலங்கைக்கு வருகை தந்து, பிராந்திய விசாரணை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவு மற்றும் நேபாளம் ஆகிய தென்னாசிய நாடுகளின் அதிகாரிகளை ஒன்றிணைத்து, அணுசக்தி பரவல் தடுப்பு, சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்களைக் கண்டறிதல் மற்றும் ஆபத்தான தொழில்நுட்பங்களுக்கான நிதியுதவிகளை முடக்குதல் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இது சர்வதேச குற்றத்தடுப்பு நடவடிக்கை போலத் தோன்றினாலும், இதன் பின்னணியில் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் நிலவும் வல்லரசுப் போட்டியில் தனது கண்காணிப்பு வலையமைப்பை விரிவுபடுத்தும் அமெரிக்கா வின் மூலோபாய நோக்கம் மறைந்துள்ளது. அதேபோன்று, கொழும்பில் அமெரிக்க இராஜாங் கத் திணைக்களத்தின் கூட்டு அச்சுறுத்தல் குறைப்பு அலு வலகம் மற்றும் அட்லாண்டிக் கவுன்சில் ஆகியன இணைந்து நடத்திய பயிற்சித் திட்டமும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை பேரவை, இலங்கை மத்திய வங்கி, கடலோரக் காவல் படை, வணிகக் கப்பல் செயலகம், துறைமுக அதிகாரசபை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை கடற்படை ஆகிய நாட்டின் மிக முக்கியமான அனைத்துப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு அதிகாரிகளையும் உள்ளடக்கிப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்கிடமான கப்பல்களை அடையாளம் காணுதல், ஏமாற்று கடல்சார் நடவடிக்கைகளைக் கண்டறி தல் மற்றும் கடல்சார் தடைகளை எதிர்கொள்ளுதல் என்ற பெயரில், இலங்கையின் அரச மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்பிற்குள் அமெரிக்கா தனது ஆதிக்கத்தையும் கண்காணிப்பையும் மறைமுகமாக ஊடுருவச் செய்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் இராணுவ அடிப்படையிலான அணுகுமுறைகளுக்கு அப்பால், அமெரிக்கா பயன்படுத்தும் மற்றொரு சக்திவாய்ந்த கருவி ‘மென் அதிகாரம்’ அல்லது சமூக மட்டத்திலான அணுகுமுறையாகும். இதன் ஒரு கட்டமாகவே ‘அமைதிப் படை’ (Peace Corps) அமைப்பைச் சேர்ந்த 34 புதிய தொண்டர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைக் கற்றுக் கொண்டு, உள்ளூர் சமூகங்களுக்கு அமெரிக்க ஆங்கிலத் தையும் கலாசாரத்தையும் கற்பிக்கவுள்ளனர்.
ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகத் தொடரும் இப்பாரம்பரியம், மேலோட்டமாகப் பார்க்கும்போது கலாசாரப் பரிமாற்றமாகவும் கல்விச்சேவையாகவும் தோன்றினாலும், இதன் உண்மையான நோக்கம் சாதாரண பொதுமக்கள் மற்றும் கிராமப்புற சமூக மட்டங்களில் அமெரிக்க சார்பு எண்ண ஓட்டத்தையும் அமெரிக்க விழுமியங்கள் மீதான நன்மதிப்பையும் உருவாக்குவதாகும்.
அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்க முன்னு தாரணங்களும் மூலோபாயங்களும் வரலாற்று ரீதியாக உலக நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்கா பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளது.
1960-70களில் இந்தியப் பெருங்கடலில் உள்ள டியோ கார்சியாவில் பிரித்தானியாவுடன் இணைந்து இராணுவத் தளத்தை அமைத்து, அப்பகுதி மக்களை வெளியேற்றி, ஒட்டுமொத்த தென்னாசிய மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் கண்காணிக்கும் மூலோபாய மையமாக அமெரிக்கா அதை மாற்றியது.
இலங்கையில் நேரடியாக இராணுவத் தளங்களை அமைக்க முடியாவிட்டாலும், கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு-சேவை ஒப்பந்தம் ACSA (Acquisition and Cross-Servicing Agreement) மற்றும் படைகளின் அந்தஸ்து ஒப்பந்தம் SOFA (Status of Forces Agreement) போன்ற ஒப்பந்தங்கள் மூலமும், கடற்படை நிபுணத்துவப் பகிர்வு மூலமும் இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் வான்பரப்பைப் பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க அமெரிக்கா முயல்கிறது.
இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் நிதி குற்றத்தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் வரி ஏய்ப்பு தடுப்பு என்ற பெயரில், அந்நாடுகளின் மத்திய வங்கிகள் மற்றும் நிதி புலனாய்வுப் பிரிவுகளுக்குள் நுழைந்து, அவர்களின் பொருளாதார முடிவுகளில் அமெரிக்கா ஆதிக் கம் செலுத்தியது.
தற்போது இலங்கையிலும் மத்திய வங்கி மற்றும் துறைமுக அதிகாரசபை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்ப தன் மூலம், சட்டவிரோத நிதிப்பரிமாற்றத் தடுப்பு என்ற பெயரில் நாட்டின் நிதி மற்றும் வர்த்தக அமைப்பைக் கண் காணிக்கும் வாய்ப்பைப் பெறுகிறது.
கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பல்வேறு அரச சார்பற்ற அமைப்புகள் மூலமாகச் சிவில் சமூகத்திற்குள் நுழைந்து, அமெரிக்க சார்புப் புத்திஜீவிகள் மற்றும் அரசியல் தலைமுறையை உருவாக்குவது அமெரிக்காவின் வழக்கமான பாணியாகும். இலங்கையிலும் சமாதானப் படை தொண்டர்களின் வருகை இத்தகைய நீண்டகால மென் அதிகார மூலோபாயத்தின் ஒரு பகுதியே ஆகும். பொதுவான எதிரியைச் சுட்டிக்காட்டி பிணைப்பை ஏற்படுத்துதல் என்ற கோட்பாட்டின்படியே பனிப்போர்க் காலத்தில் கம்யூனிச அச்சுறுத்தலைக் காட்டி ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் தனது ஆதிக்கத்தைப் பரப்பியது அமெரிக்கா.
தற்போது இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் ‘சீனா வின் கடன்பாடுகளும் கடல்சார் ஆக்கிரமிப்புகளும்’ மற்றும் ‘அணுசக்தி பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்’ ஆகிய வற்றை முன்னிலைப்படுத்தி, இலங்கை போன்ற சிறிய நாடுகளைத் தன் பக்கம் இழுக்க முயல்கிறது.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொரு ளாதார நெருக்கடிகள் மற்றும் பிராந்தியப் புவிசார் அரசியல் சவால்களைச் சாதகமாகப் பயன்படுத்தி, தனது இராணுவ, பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர வலைப்பின்னலை விரிவு படுத்த அமெரிக்கா முயல்கிறது. அமெரிக்கப் புதிய தூதுவர் மற்றும் பிரதித் தூது வரின் விரைவான வருகை, அதிகாரிகளின் நேரடித் தலையீடு கள், கடற்படை மற்றும் நிதியியல் துறை அதிகாரிகளுக்கான பயிற்சிகள், மற்றும் அமைதிப் படையினரின் சமூக மட்டப் பணிகள் ஆகியவை அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஒரு பரந்த உலகளாவிய மூலோபாயத்தின் பகுதிகளாகும்.
இந்தியப் பெருங்கடலில் சீனாவிற்கு எதிரான தனது பலத்தை அதிகரிப்பதற்கும், பிராந்திய பாதுகாப்பில் முன்னணிச் சக்தியாகத் திகழ்வதற்கும் இலங்கையை முக்கிய மூலோபாயத் தளமாக அமெரிக்கா பயன்படுத்த விளைகிறது என்பதை இந்தத் தொடர் நகர்வுகள் ஐயமின்றி உறுதிப்படுத்தி நிற்கின்றன.