இலங்கையின் பொருளாதார கட்டமைப்புக்கும் உலக ளவில் இலங்கைக்கு முகவரியைப் பெற்றுத் தந்த ‘சிலோன் டீ’ என்ற வர்த்தக நாமத்துக்கும் அடிப்படையாக விளங்குவது மலையகத் தோட்டப் பகுதிகளில் வாழும் பெண்களின் இடைவிடாத உழைப்பாகும். மலையகப் பெருந்தோட்ட பகுதிகளில் பணிபுரியும் பெண்களும் அங்கு உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தேயிலை தொழிற் சாலைகளும், இந்தத் தேயிலை உற்பத்தியின் நுட்பங் களையும் அதன் பின்னணியில் உள்ள பெண்களின் வாழ் வியலையும் நமக்கு அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன.
அதிகாலைப் பனி மூடிய மலைச்சாரல்களில், சூரியன் உதிப்பதற்கு முன்பே பெண்களின் பணி தொடங்கிவிடுகிறது. தலையில் தொங்கும் கூடைகளைத் தாங்கியபடி, தேயிலைச் செடிகளுக்கு இடையே நகரும் பெண்களின் விரல்கள் மிக நுட்பமாகச் செயல்படுகின்றன. எதை பறிக்க வேண்டும், எதை விட்டுவைக்க வேண்டும் என்பதில் பெருந்தோட்ட பெண்களுக்கு பல வருடப் பயிற்சி தேவையில்லை. அது அனுபவத்தால் விளைந்த இயல்பான உணர்வாகும். “இரண்டு இலைகளும் ஒரு மொட்டும்” என்ற சரியான பதத்தை நொடிப்பொழுதில் கண்டறிந்து பறிக்கும் திறன் இவர்களின் கைதேர்ந்த உழைப்புக்குச் சான்றாகும்.
தேயிலைத் தொழிலின் சிறப்பு என்னவென்றால், இது தோட்டத்தில் கொழுந்து பறிப்பதோடு முடிந்து விடுவதில்லை. பறிக்கப்பட்ட இலைகள் தொழிற்சாலைக்கு வந்தடைந்தது முதல் அவை ஏற்றுமதிக்குத் தயாராகும் வரை உள்ள அனைத்துக் கட்டங்களிலும் பெண்களே முதன்மைப் பங்கு வகிக்கின்றனர். இளம் பெண்கள் முதல் எழுபதுகளைத் தொட்ட அனுபவமிக்க பெண் தொழிலாளர்கள் வரை ஒரே கூரையின் கீழ் தேயிலை தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர். தேயிலையின் நறுமணம், அதன் பக்குவம் மற்றும் தொடு உணர்வை வைத்து அதன் தரத்தைக் கணிக்கும் நுட்பமான கலை, புத்தகங்கள் வழியே கற்பிக்கப்படுவதில்லை.
மாறாக, மூத்த பெண் தொழிலாளர்களிடமிருந்து இளைய தலைமுறையினருக்கு இயல்பாகக் கடத்தப் படுகிறது. பறிக்கப்பட்ட பச்சை இலைகள் சுவைமிக்க தேயிலையாக மாறுவதற்குப் பல கவனமான படிநிலை களைக் கடக்க வேண்டியுள்ளது. முதலாவதாக, பறிக்கப்பட்ட இலைகள் நீண்ட தட்டுகளில் பரப்பப்பட்டு, சூடான காற்றைச் செலுத்துவதன் மூலம் அவற்றின் ஈரப்பதம் குறைக்கப்பட்டு வாடவைக்கப்படுகின்றன. இதன் மூலம் இலைகள் மென்மையாகி அடுத்த கட்டத்திற்குத் தயாராகின்றன.
தொடர்ந்து, கனரக இயந்திரங்கள் மூலம் இலைகள் சுருட்டப்பட்டு நொறுக்கப்படுகின்றன. இந்த செயல் முறையானது இலைகளுக்குள் இருக்கும் இயற்கை யான எண்ணெய்களை வெளியேற்றி, சிலோன் டீயின் தனித்துவமான நறுமணத்தை உருவாக்குகின்றது. இத னைத் தொடர்ந்து நடைபெறும் மிக முக்கியமான கட்டம் ஆக்சிஜனேற்றம் ஆகும். குளிர்ந்த மற்றும் ஈரப்பதமான அறைகளில் வைக்கப்படும் இலைகள், படிப்படியாக பச்சை நிறத்தை இழந்து அடர்ந்த செம்புப் பழுப்பு நிறத்திற்கு மாறுகின்றன.
இக்கட்டத்தில் நேரத்தை மட்டும் கணக்கில் கொள் ளாமல், இலைகளின் நிறம், பக்குவம் மற்றும் மணத்தை வைத்து அவை அடுத்த கட்டத்திற்குத் தயாராகிவிட்டனவா என்பதைத் தொழிலாளர்கள் தங்களின் அனுபவத்தால் தீர்மானிக்கின்றனர். இறுதியாக, விறகு அடுப்புகள் மூலம் தயாரிக்கப்படும் புகையில்லாத சூடான காற்றைக் கொண்டு இலைகள் உலர்த்தப்பட்டு, அவற்றின் தரம் மற்றும் அளவு களுக்கு ஏற்ப வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
இந்தத் தயாரிப்புப் பணியில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான இயந்திரங்கள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக் காலத்தில், அதாவது 19 ஆம் நூற்றாண்டில் நிறுவப் பட்டவை ஆகும். சுமார் நூறு ஆண்டுகளைக் கடந்த இந்த இயந்திரங்கள் அருங்காட்சியகப் பொருட்களாக இல்லாமல், தொழிலாளர்களின் சிறந்த பராமரிப்பினால் இன்றளவும் தங்கு தடையின்றி இயங்கி வருகின்றன.
தற்போது பல தேயிலை தொழிற்சாலைகளில் மின்சாரத்தைக் கொண்டு தேயிலையை அரைக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்ற போதிலும் பெரும் பாலான தொழிற்சாலைகளில் ஆரம்பகால முறையான விறகுகளைக் கொண்டு தேயிலை அரைக்கும் செயற்பாடு இன்றும் பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும், இந்த பிரம்மாண்டமான உற்பத்தி அமைப்பின் பின்னால் ஒரு கசப்பான உண்மை மறைந்துள்ளது.
உலகளவில் தேயிலை உற்பத்தியிலும் ஏற்றுமதியி லும் முன்னணி வகிக்கும் ஒரு நாட்டின் பொருளாதாரத் தூண்களாக இருக்கும் தோட்டத் தொழிலாளர்கள், நாட்டின் மிகவும் பொருளாதாரப் பாதுகாப்பற்ற பிரிவினராகவே எஞ்சியுள்ளனர். செங்குத்தான, வழுக்கக்கூடிய மலைப் பாதைகளில் 18 முதல் 20 கிலோகிராம் எடையுள்ள கூடைகளைத் தலையில் சுமந்தபடி, கடும் மழை மற்றும் வெயிலைப் பொருட்படுத்தாமல் நாளொன்றுக்கு 8 முதல் 10 மணிநேரம் இவர்கள் உழைக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக ஆண் தொழிலாளர்களின் வேலை நேரத்தை விட பெண் தொழிலாளர்களின் வேலை நேரம் அதிகமாகவே உள்ளது. அத்துடன், முறையான ஊதியமின்மை மற்றும் பணவீக்கம் காரணமாக இவர்க ளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இவர் கள் ஈட்டித் தரும் வருமானத்துடன் ஒப்பிடுகையில், இவர்களுக்குக் கிடைக்கும் மாத ஊதியம் இவர்களது குடும்பத்தின் அடிப்படை உணவுத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை.
மலையகத் தோட்டப் பகுதிகளில் வாழும் குடும்பங்க ளில் கணிசமான சதவீதத்தினர் கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். விலைவாசி உயர்வு மற்றும் குறைந்த வேதனம் காரணமாக, பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் பசியைப் போக்குவதற்காகத் தாங்கள் பட்டினியாக இருக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உலகச் சந்தையில் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பல கோடிகளை ஈட்டித் தரும் சிலோன் டீயின் ஒவ்வொரு துளி சுவையிலும், இந்த மலையகப் பெண்களின் சிந்திய வேர்வையும் கண்ணீரும் கலந்திருப்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.
மலையகத் தோட்டப் பகுதிகளில் வாழும் குடும்பங் களில் 44 சதவீதத்திற்கும் அதிகமானோர் கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொண்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டுகிறது. இது நகர்ப்புற நிலையை விட இரு மடங்கு அதிகமாகும். அதிகரித்துச் செல்லும் விலை உயர்வு மற்றும் குறைந்த கூலி காரணமாக, பல தாய்மார்கள் தங்கள் மக்களின் பசியைப் போக்குவதற்காகத் தாங்கள் பட்டினியாக இருக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தேயிலைத் தோட்டங்களில் மிதந்து வரும் நறுமணத்தின் பின்னணியில், தலைமுறை தலைமுறையா கத் தங்கள் வாழ்க்கையையே உரமாக்கிக் கொண்டிருக்கும் இந்த மலையகப் பெண்களின் உழைப்பு வெறும் பொருளாதாரப் புள்ளிவிவரங்களால் அளவிட முடியாதது. நாட்டின் அந்நியச் செலாவணியைத் தீர்மானிக்கும் முதன்மைச் சக்தியாகத் திகழும் பெருந்தோட்ட பெண் களுக்கு, முறையான நியாயமான ஊதியம், உழைப்பிற்கேற்ற பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட வாழ்வாதார உரிமைகள் உறுதி செய்யப்படாதவரை, ‘சிலோன் டீ’யின் உலகளாவிய பெருமை முழுமையடையாது.
உலகமே சுவைத்துக் மகிழும் ஒவ்வொரு கோப்பை இலங்கைத் தேயிலையிலும் மறைந்திருக்கும் இந்தத் தியாகக் கதைகள் அங்கீகரிக்கப்பட்டு, அவர்களின் நல்வாழ் விற்கான நிரந்தரத் தீர்வுகள் எட்டப்படுவதே வரலாற்று ரீதியாக அவர்களுக்குச் செய்யப்படும் உண்மையான நீதியா கும்.



