தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தலை ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலகளவில் உலகெங்கும் முன்னெடுக்கின்ற இன்றைய நாளில் (26.09.26), இலக்கு ஆசிரியர் குழுவினரும் ஈழத்தமிழர்களுடன் இணைந்து வீரவணக்கத்தைத் தெரிவிக்கின்றார்கள்.
அறவழிப் போராட்ட அரசியலை முன்னெடுத்தவர்களெனக் காந்தியையும் நெல்சன் மண்டேலாவையும் கொண்டாடும் உலகம், தியாக தீபம் திலீபனுக்கு 39 ஆண்டுகளாக அத்தகைய மதிப்பளிப்பைச் செய்யாதிருப்பதற்கு என்ன காரணம்?
முக்கிய காரணம், ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் அனைத்துலகிலும் தியாக தீபம் திலீபனின் வரலாற்றை உலக மக்களுக்கோ, உலக நாடுகளின் அரசாங்கங்களுக்கோ, ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்களுக்கோ, உலக வரலாற்றின் ஒரு அங்கமாகத் தெரியப்படுத்துவதில் சரியான முறையில் செயற்படவில்லை என்பதுதான் பதிலாக உள்ளது.
இதனை மாற்றியமைப்பதற்கு, தியாக தீபம் திலீபனின் வரலாறு உலகத் தமிழர்களால் உலகின் முக்கிய மொழிகளில் வெளியிடப்பட வேண்டும். அப்பொழுதுதான் ஜென்சி இளையவர்களும் உலகத்தினரும் அவரது ஈடிணையில்லாத தியாகத் தன்மையைப் புரிந்து, அவருக்குரிய மதிப்பினை வழங்குவர்.
வரலாறு என்ற வகையில், இதற்கான மூல நூலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது வரலாற்றுத் துறை வழியாகவோ அல்லது அரசியல் அறிவியல் துறை வழியாகவோ சான்றாதாரங்களுடன் வெளியிட்டு, அதனை உலக மக்கள் மயப்படுத்த, 40வது ஆண்டை நோக்கித் திலீபனின் நினைவேந்தல் பயணிக்கத் தொடங்கியுள்ள 2026–27 காலப்பகுதியில் உலக மக்களிடையே நிலைப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்பது இலக்கின் இவ்வாரக் கருத்தாகவுள்ளது.
இளநிலை, முதுநிலை வரலாற்று, அரசறிவியல் பட்டப்படிப்புகளிலும், முனைவர் பட்ட ஆய்விலும் மாணவர்களைத் திலீபன் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள இடமளிக்க வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் இதற்கான நிதித் துணையினை வழங்க வேண்டும்.
தனியாட்கள், அமைப்புக்கள் செய்யும் வரலாற்று ஆய்வுகளை விடப் பல்கலைக்கழக வழியான ஆய்வுகளின் முடிவுகளே உலக மட்டத்தில் ஏற்புடையனவாக ஏற்கப்படும் என்பதாலேயே, எமது பல்கலைக்கழகங்கள் தமது பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும்.
மேலும், தனிநிலையில், அமைப்பு நிலையில் 2023 முதல் திலீபனின் பயணத்தை ஆவணப்படுத்தும் ஆவணக்காப்பகம் செயற்பட்டு வருவது பாராட்டுக்குரிய விடயம். நல்லூரில் திலீபனின் வரலாறு குறித்த கண்காட்சியை நடத்தும் இவ்வமைப்பு, இங்கிலாந்தின் குரோலி மற்றும் லிவர்பூல் ஆகிய நகரங்களிலும், பிரான்சில் பாரிசிலும், தேசங்கடந்துறை ஈழத்தமிழருடன் இணைந்து கண்காட்சிகளை விரிவாக்கி வருகின்றனர்.
உலக ஈழத்தமிழினமாக விளங்கும் ஒவ்வொருவரும் இவர்களுடன் தொடர்புகொண்டு, தியாக தீபம் திலீபனின் வரலாற்றை ஈழத்தமிழரின் இளையவர்கள் மட்டுமல்ல, உலகின் இளையவர்களும் அறிய உதவ வேண்டும் என்பது இலக்கின் பணிவன்பான வேண்டுகோளாகவுள்ளது.
பலஸ்தீனிய விடுதலை இயக்கத்தினர் மற்றும் தென்னாபிரிக்க விடுதலை இயக்கத்தினர் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று, மாணவர்கள் கூடும் பகுதிகளில் சிறிய காட்சிப் பீடமமைத்து, அதில் நூல்களை, ஒளி–ஒலி நாடாக்களை வைத்து, மாணவர்களுக்குத் தங்கள் வரலாற்றைக் காட்சிப்படுத்தி, அது குறித்துத் தங்களுடன் பேச வருபவர்களுக்கு விபரமாக விளக்கமளித்து, இளையவர்களிடையே உலகெங்கும் தங்கள் உண்மை நிலையைத் தெளிவாக்கினார்கள்.
இதனை முன்மாதிரியாகக் கொண்டு, நல்லூரில் தொடங்கப்பெற்ற திலீபனின் வரலாற்றை வெளிப்படுத்தும் பணியை உலகப் பல்கலைக்கழகங்களுக்கும், அங்குள்ள தமிழ்ச் சங்கங்கள் மற்றும் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களுக்கும் நீட்சி பெறச் செய்ய வேண்டும்.
அதேபோல கிறிஸ்தவ ஆலயங்களில், சபைகளில் வழிபாடுகள் முடியும் நேரத்தில் நாட்டின் மூத்த குடிகள், வயதை அடைந்த, அதாவது 65 வயதுக்கு மேற்பட்டவர்களைச் சந்தித்து உரையாடி, தங்களுக்கான ஆதரவைப் பலப்படுத்தினர். இவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுக்க விரும்புகையில், தெருக்கரைப் பரப்புரைகளை, சந்தைகள், வர்த்தக நிலையங்கள் போன்ற இடங்களில் காட்சிப் பீடங்களை அமைத்து, தங்கள் கருத்துக்களை உலகறியச் செய்தனர். ஈழத்தமிழர்கள் தங்கள் கோயில்கள் வழியாக இத்தகைய முறையில் திலீபனின் வரலாற்றை மக்கள் மயப்படுத்தலாம். தமிழ் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களில் காட்சிப்படுத்த உதவலாம்.
இத்தகைய ஏற்புடைய முயற்சிகள் வருடம் முழுவதற்கும் திட்டமிடப்பட்டு, ஒரு நினைவேந்தல் நாளில் இருந்து அடுத்த ஆண்டு நினைவேந்தல் நாள் வரை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டாலே குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் முயற்சிக்குத் தகுந்த பலனைத் தரும்.
இன்று செயற்கை நுண்ணறிவு வழியாகவே இளையவர்கள் தங்களுக்கான அறிவுத் தேடல்களைக்கூட நடத்துவதால், சரியான வரலாற்றுத் தரவுகள், தகவல்கள் செயற்கை நுண்ணறிவுப் பதிவுகளாக உழைக்க வேண்டியவர்களாக உலக இனமாகத் திகழும் ஈழத்தமிழர்கள் உள்ளனர்.
இவைதான் மக்கள் போராட்டத்திற்கான முதற்படி. இந்த அடித்தளம் எவ்வளவு உறுதியாக அமைக்கப்படுகிறதோ, அந்த அளவுக்குத்தான் அழுத்தக் குழுக்களாக இவை மாறி, அரசியல்வாதிகள் தியாக தீபம் திலீபனைக் குறித்து பேச, எழுதத் தொடங்குவார்கள்.
திலீபனின் வரலாறு மட்டுமல்ல, ஈழத்தமிழர்களின் வரலாற்று நிகழ்வுகளும் உலக மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும். உதாரணமாக, பிரித்தானியக் காலனித்துவ அரசால் 21 செப்டெம்பர் 1833 இல் கோல்புறூக்–கமரோன் அரசியல் சீர்திருத்தம் இலங்கைத் தீவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண, வன்னி அரசுகளின் இறைமைகள் கண்டி சிங்கள அரசின் இறைமைக்குள் உள்வாங்கப்பட்டது. இதன் விளைவாக, இலங்கைத்தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையைக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் தங்களுடைய இறைமையின் அடிப்படையில் தங்களின் தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தித் தங்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தங்களின் அடிப்படை மனித உரிமையான தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தி வாழ இயலாத உலகின் மூத்த குடிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஈழத்தமிழரின் இறைமை பிரித்தானியக் காலனித்துவப் பேரரசால் ஒடுக்கப்பட்டு 193வது ஆண்டு நிறைவுக்கு வரும் 21 செப்டெம்பர் 2026 இலாவது, ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினை (Tamil Nation Question) தங்கள் இறைமையைப் பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியிலிருந்து மீள்நிறுவுதல் என்பதே என்ற உண்மையை ஈழத்தமிழ் அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைமையான மனு மூலம் தெரிவித்து, காலனித்துவத்தால் தீர்க்கப்படாத பிரச்சினையாக 04.02.1948 முதல் இன்று வரை 78 ஆண்டுகளாகத் தொடரும் இந்த உலகப் பிரச்சினைக்கு ஈழத்தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் உலக நாடுகள் உரிய தீர்வை வழங்க வேண்டும் எனக் கோர முயற்சிக்க வேண்டும்.
மேலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், இந்த ஈழத்தமிழர் இறைமையை மீள்நிறுவு வதற்கான முயற்சியில் 29.10.1944 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசை நிறுவியது முதல் இன்று வரை 81 ஆண்டுகள் தொடர்ந்து முயற்சித்து வரும் ஈழத்தமிழரின் முதன்மை அரசியல் கட்சியான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் தலைவரும், யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்றப் பிரதிநிதியுமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் 2023ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைத்த, ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி ஒருவரை ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்குத் தகுந்த தீர்வு காணும் வரை நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கையை மீளவும் வலியுறுத்த வேண்டிய நேரமிது.
இந்தத் தேவைகளின் அடிப்படையில், பிரித்தானியக் குடிகளாகவுள்ள, பிரித்தானியாவில் புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்கள், பலஸ்தீனியர்களின் பிரச்சினையில் நியாயமான தீர்வை முன்னெடுக்க முயற்சிக்கும் பிரித்தானியாவின் இன்றைய பிரதமர் அன்ரி பேர்ணம் அவர்களிடம், ஈழத்தமிழர்களின் இறைமையையும் வெளியகத் தன்னாட்சி உரிமையையும், அதனை 1796 இல் கையகப்படுத்திய பிரித்தானிய அரசின் இன்றைய பிரதமர் என்ற வகையில் மீள்உறுதி செய்யும்படி கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.
பிரித்தானியக் காலனித்துவ அரசாங்கம் தான் 1833 இல் செயற்கையாக உருவாக்கிய சிலோன் என்னும் இலங்கைத்தீவின் அரசாங்கத்துக்குச் சுதந்திரம் வழங்குவதற்காக, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 29.10.1944 இல் அமைக்கப்பட்ட 15 நாட்களுக்கு இடையிலேயே சோல்பரி ஆணைக்குழுவை நியமித்தது.
இந்த ஆணைக்குழு ஈழத்தமிழர் இருப்புக்கும் இறைமைக்கும் எதிரான விதந்துரைப்புகளைச் செய்ததை அடுத்து, 03.11.1945 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் தலைவரும் சட்டமேதையுமான அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களால் ஈழத்தமிழர் இருப்பும் இறைமையும் பாதுகாக்கப்படவில்லை என்ற எதிர்ப்பு பிரித்தானிய அரசாங்கத்திற்கு விரிவாக அறிக்கை மூலம் கவனப்படுத்தப்பட்டது.
அதற்கு அடுத்த ஆண்டு ஜனவரியிலேயே, 15.01.1946 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எஸ். சுப்பிரமணியம் அவர்களால் லேபர் கட்சியின் பிரதமர் அட்லி அவர்களிடம் சிறுதேச இனமான ஈழத்தமிழரின் தன்னாட்சிக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இவற்றை அன்றைய லேபர் கட்சித் தலைமை கவனத்தில் எடுக்காததே இன்றைய ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை என்பதனை விளக்கி, ஏற்புடைய தீர்வை ஈழத்தமிழர் பெற உதவுமாறு பிரித்தானிய பிரதமர் அன்ரி பேணம் அவர்களிடம் கோரிக்கை எழுப்ப வேண்டுமென்பது இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.
ஆசிரியர்
Ilakku Weekly ePaper 410 | இலக்கு-இதழ்-410 | சனி, 26 செப்டெம்பர், 2026




