சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings) இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு நாணயக் கடன் தரவரிசையை ‘CCC+’ இலிருந்து ‘B-’ ஆக இன்று (22) உயர்த்தியுள்ளது.
வெளிநாட்டு நிதியளிப்பு அபாயங்களைக் குறைக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் கட்டமைப்புச் சீர்திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings) தெரிவித்துள்ளது.
கட்டமைப்புச் சீர்திருத்தங்களால் வலுப்படுத்தப்பட்ட பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மைக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை, வெளிநாட்டு நிதியளிப்பு அபாயங்களைக் குறைத்துள்ளதுடன் பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் திறனையும் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இலங்கையின் கடன் நிலைமை தொடர்ந்தும் அதிக கடன் மற்றும் கடன் சேவை விகிதங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நிய செலாவணி கையிருப்பு மிதமான மட்டத்திலேயே உள்ளதாகவும் குறித்த அமைப்பு எச்சரித்துள்ளது.
மேலும், அதிகரித்து வரும் எரிசக்தி விலைகள் காரணமாக, மூன்று ஆண்டுகளாக உபரியில் காணப்பட்ட இலங்கையின் நடப்புக் கணக்கு 2026ஆம் ஆண்டில் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



