மட்டக்களப்பு, வாகனேரி பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 60 வயதுடைய விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, யானை – மனித மோதலுக்கு உடனடியாக தீர்வு பெற்றுத்தருமாறு கோரி பிரதேச மக்கள் இன்று (21) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாகனேரி பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று (21) காலை வீட்டிலிருந்து வயல் வேலைக்காகச் சென்றிருந்தபோதே குறித்த விவசாயி காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினரும் மரண விசாரணை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாகனேரி பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகவும், இதுதொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளிடம் பலமுறை முறைப்பாடுகள் முன்வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பிரதேச மக்கள் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து, சம்பவம் இடம்பெற்ற பகுதியில் ஒன்றுகூடிய மக்கள், “இனியும் எமது பகுதியில் மற்றுமொரு உயிரிழப்பை எதிர்கொள்ளத் தயாரில்லை. யானை – மனித மோதலுக்கு உடனடியாக தீர்வு பெற்றுத்தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும், மக்களின் உயிரை துச்சமாக எண்ணுகின்ற அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் இதுவரை உரிய தீர்வு எடுக்கவில்லை என்று அவர்கள் சாடினார்.
காலம்தோறும் மக்களின் உயிரை காவு கொள்ளும் காட்டுயானைகளிடம் இருந்து பாதுகாத்து கொள்ள வாகனேரி கிராமத்துக்கான யானை வேலியை உடனடியாக அமைத்துர வேண்டும் என்று சுலோகங்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோஷங்களை எழுப்பினர்.



