உயர் கல்வித் தகுதிகளைக் கொண்ட ஆசிய நாடுகளின் இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் இலங்கையிலேயே மிக அதிகளவில் காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்தப் பெறுமதி 43 சதவீதமாகும்.
13 வருட பாடசாலைக் காலத்தையும், அதனைத் தொடர்ந்த உயர்கல்வியையும் வெற்றிகரமாக நிறைவு செய்யும் நாட்டின் கற்றறிந்த, புத்திஜீவி மாணவர் சமூகத்தின் அடுத்த எதிர்பார்ப்பு, தமது வேலைவாய்ப்புக் கனவை நனவாக்கிக்கொள்வதாகும்.
எனினும், நாட்டில் வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வது சோகமான நிலையாகும்.
உயர் கல்வித் தகுதிகளைப் பெற்ற வேலையற்ற இளைஞர் யுவதிகள் தொடர்பாகச் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையின் மூலமே இத்தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வறிக்கையின்படி, உயர் கல்வித் தகுதிகளைப் பெற்ற 15 முதல் 24 வயதிற்கு இடைப்பட்ட இலங்கை இளைஞர் யுவதிகளின் வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட 43 சதவீதமாக உள்ளது.
ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை இதில் மிக உயர்ந்த சதவீதத்தில் உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக அதிகப்படியான பெறுமதி இந்தியாவிலிருந்து பதிவாகியுள்ளது. அதன்பின்னர் இந்தோனேசியா, மலேசியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளும் இச்சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அத்துடன், உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில் உயர் கல்வித் தகுதிகளுடன் சுமார் 1.2 பில்லியன் இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புச் சந்தையில் நுழைந்தபோதிலும், உலகில் 500 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளே உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



