ஜே.வி.பி இனவாதம் இல்லை என்று பேசிக்கொண்டு ஒரு இனவாத தரப்பை மிக பலமான ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கு மறைமுகமாக உதவுகிறது என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறை பேராசிரியர் கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்கள் எல்லா வகையான தளத்திலும் கபளீகரம் செய்யப்படுகிறார்கள் என்றும் ஈழ தமிழர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு ஆரோக்கியமான அரசியல் இருப்பு இல்லை என்ற ஒரு தேக்க நிலைக்குள் அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் அநுராதபுர சந்திப்பை பார்க்கின்ற போது தமிழ் மக்களை பொறுத்தவரையில் அச்சப்பட வேண்டிய ஒரு சூழலுக்குள்ளே தான் இருக்கிறார்கள் என்பது புலனாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் பொதுஜன பெரமுனவினுடைய வேட்பாளர் யாராவது ஜனாதிபதியாக வருவதற்குரிய வாய்ப்பை அதீதமாக கொண்டிருக்கின்ற ஒரு இருப்பு தென்னிலங்கையில் வளர்ச்சி அடைந்திருக்கிறது.
ஜே.வி.பி இனவாதம் இல்லை என்று பேசிக்கொண்டு ஒரு இனவாத தரப்பை மிக பலமான ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கு அது மறைமுகமாக உதவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுவும் குறிப்பாக இலங்கை தமிழருக்கு எதிரான ஒரு அரசியலை நகர்த்துகின்ற போது குறித்த இரு தரப்பும் ஒருபோதும் எதிர் துருவங்களாக தங்களை காட்டிக் கொள்ளவில்லை என்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறை பேராசிரியர் கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.



