சவுதியில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள அனோஜன் குறித்து அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

சவுதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் இலங்கையரான அனோஜன் சிவராசாவின் விவகாரத்தை, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் என்பன உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் தகவலின்படி, ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் இவ்வழக்கு தொடர்பான விடயங்களை கண்காணிப்பதோடு, கொழும்பில் உள்ள சவுதி அரேபியத் தூதரகத்துடனும் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட சவுதி அதிகாரிகளுடன் இராஜதந்திர வழிகளில் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாகவும், அனோஜனின் நலன்களைப் பாதுகாப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், குறித்த இலங்கை நாட்டவருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சவுதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் இலங்கையரான அனோஜன் சிவராசாவை மீட்குமாறு வலியுறுத்தி நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

அத்துடன் அரசியல் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் குறித்த இளைஞனை மீட்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.