நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய அரசாங்கம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடித்துள்ளது. 2024 ஆகஸ்ட் மாதம் படகு சேவை மீள ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இந்திய அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த நிதியுதவியை வழங்குகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதிலும், மக்கள்-to-மக்கள் தொடர்புகளை வலுப்படுத்துவதிலும் இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த நீடிப்பு வெளிப்படுத்துகிறது.
இந்த நிதியுதவி Viability Gap Funding (VGF) எனப்படும் செயல்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 300 மில்லியன் இலங்கை ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது. பயணிகளுக்கு சேவை கட்டணத்தை மலிவாக வைத்திருப்பதுடன், படகு சேவையின் தொடர்ச்சியான செயற்பாடு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக முக்கியமான தளவாட மற்றும் செயற்பாட்டு செலவுகளை ஈடுசெய்யும் வகையில், கடந்த ஆண்டைப் போன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த உதவி வழங்கப்படுகிறது.
இந்தப் படகு சேவைக்கான நிதியுதவியை தொடர்ந்து வழங்குவது, இரு நாடுகளுக்கும் இடையிலான மேம்படுத்தப்பட்ட கடல்சார் இணைப்பு தொடர்பான பகிரப்பட்ட நோக்கத்துடனும் ஒத்துப்போகிறது. இந்த நோக்கம் 2024 டிசம்பர் மாதம் இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போதும், 2025 ஏப்ரல் மாதம் இந்திய பிரதமர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போதும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.



