மனிதக் கட்டுப்பாட்டுக்கு அப்பால் இயங்குகின்ற அல்லது மனிதர்களை நேரடியாக இலக்குவைக்கக்கூடிய தானியங்கி ஆயுதங்களுக்கு உறுப்புநாடுகள் வலுவான தடைகளை விதிக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பக்க நிகழ்வில் ஜெனீவாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி சுமித் தசநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரின் தொடக்கநாள் அமர்வின் பக்க நிகழ்வாக நடைபெற்ற மரபுசார் ஆயுதங்கள் குறித்த 7ஆவது மீளாய்வு மாநாட்டுக்கான ஆயத்தக் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கைப் பிரதிநிதி, வெகுவிரைவில் நடைபெறவுள்ள மீளாய்வு மாநாட்டில் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய தானியங்கி ஆயுதங்களை சட்டபூர்வமாகக் கட்டுப்படுத்தக்கூடிய சர்வதேச உடன்படிக்கையை எட்டுவதற்கான தெளிவான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தினார்.
அதேபோன்று சர்வதேச மனிதாபிமானச் சட்டத்துக்கு அமைவான இயங்குகை மற்றும் சட்டபூர்வ ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்துவதற்கு தானியங்கி ஆயுதங்களின் பயன்பாட்டுக்காலம் முழுவதும் மனிதனின் கண்காணிப்பும் கட்டுப்பாடும் அவசியம் என்றும் சுமித் தசநாயக்க சுட்டிக்காட்டினார்.
‘ஆயுதப் போராட்டங்களின்போது மனித உயிர்கள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் உரித்தை மனித தலையீடின்றி, இயந்திரங்களிடம் கையளிக்கக்கூடாது. எனவே மனிதக் கட்டுப்பாட்டுக்கு அப்பால் இயங்குகின்ற அல்லது மனிதர்களை நேரடியாக இலக்குவைக்கக்கூடிய தானியங்கி ஆயுதங்களுக்கு உறுப்புநாடுகள் வலுவான தடைகளை விதிக்கவேண்டும்’ எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.



