எல்-நினோவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக மாறி வரும் இலங்கை!

தெற்காசிய நாடுகளிலேயே எல்-நினோவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை மாறி வருகிறது.

இந்த நிலையில்  இலங்கையின் 6 மாகாணங்களைச் சேர்ந்த 7 பிரதான மாவட்டங்கள் மிக மோசமான நேரடிக் குடிநீர்  பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளன. அனுராதபுரம், பொலன்னறுவை, முல்லைத்தீவு, மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் கடும் குடிநீர்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இலங்கை பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரி பிரகித் தனசூர்யா கூறுகையில் “சுட்டெரிக்கும் வெப்பம், பொய்த்துப் போன மழைப்பொழிவு ஆகியவற்றால் 25 மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 15 ஆயிரம் மக்கள் கடும் குடிநீர் பஞ்சத்தைச் சந்தித்து வருகிறார்கள். தேசிய பேரிடர் மையத் தரவுகளின்படி, 28 மண்டலங்களில் 30,011 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 94 ஆயிரம் மக்களுக்குக   குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.

அதே நேரம் இலங்கையில் நிலவும் கடும் வறட்சி மற்றும் வெப்பத்தால், புகழ்பெற்ற யால தேசிய வனவிலங்கு பூங்கா தற்காலிகமாக மூடப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மாவட்ட வன அதிகாரி சுஜீவாலா நிசாந்த கூறுகையில் “எங்களுக்கு இப்போது விலங்குகள் நலன்தான் முக்கியம். யால, வில்பத்து, குமணா, புந்தல ஆகிய வனவிலங்குப் பூங்காக்களில்   தண்ணீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் சுற்றுலாப் பயணிகள் யாருக்கும் அனுமதி இல்லை. அக்டோபர் 15-ம் தேதி வரை பூங்கா மூடப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

செப்டம்பர் மாதத்தின் பெரும்பகுதி வரை வறண்ட காலநிலையும் அதிக வெப்பமுமே தொடரும் என இலங்கை வானிலை மையம் கணித்துள்ளது. இலங்கை வானிலை மையத்தின் இயக்குநர் ஏ.எல்.கே.விஜிமனேகே கூறுகையில், “செப்டம்பர் மாத இறுதி வாரத்திலிருந்து மிதமான மழைப்பொழிவு தொடங்கக்கூடும். அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு கிடைக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.