யாழ்ப்பாணம் – வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் 21ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மயிலிட்டியில் அமைந்துள்ள இராணுவத்தினரின் “கொமோண்டோ” பங்களா முன்பாக இன்றைய தினம் (11) இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அதன் பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாமல், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே உள்ளது.
தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வருவதுடன் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்தனர்.
இந்தநிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 21ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.



