செம்மணியில் மீட்கப்பட்ட சான்று பொருட்களை ஐ.நா.விடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி பேரணி

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை பாதுகாக்கும் பொறுப்பை சர்வதேசத்திடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழ் தேசிய பேரவையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த போராட்டத்தில் பங்கேற்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சியங்களாக வெளிவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சான்றுப் பொருட்கள் குற்றத்தை இழைத்த தரப்பான சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதானது, அவற்றை சேதப்படுத்தி குற்றங்களை நிரூபிக்க முடியாத சூழலை ஏற்படுத்தக்கூடிய ஆபத்துள்ளது.

எனவே குற்றமிழைத்த தரப்பாக உள்ள சிறீலங்கா அரசின் தலையீடுகள் எதுவும் அற்ற வகையில் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி உள்ளிட்ட அனைத்து புதைகுழிகளதும் அகழ்வாராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அதற்கான சர்வதேச தடய அறிவியல் நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து நிபுணர்களையும் நியமித்தல் அகழ்தெடுக்கப்படும் தடங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உடனடியானதும் அவசரமானதுமான இந்த கோரிக்கை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் மாபெரும் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ். நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலத்திற்கு அருகாமையில் பேரணி ஆரம்பமாகி, கிட்டு பூங்காவில் பொதுக் கூட்டம் நடைபெறும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதன்படி செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கான சர்வதேச நீதி விசாரணை பொறிமுறை வேண்டும், சுயாதீன சர்வதேச விசாரணை, சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உண்மை மற்றும் நீதி, அரசியல் கைதிகளின் உடனடியான விடுதலை, இராணுவமயமாக்கலை முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் தமிழ் மக்களின் நில உரிமையைப் பாதுகாத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த பேரணி இடம்பெறவுள்ளது.