சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நேரில் சென்று சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், ‘நாமலின் கைது ஒரு பழிவாங்கும் செயலாக இருக்கக்கூடும் அல்லது இல்லாமலும் போகலாம் இச் சூழ்நிலையைச் சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளோம்.
எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்தின் ஊடாக நாமல் ராஜபக்சவிற்குப் பிணை பெறுவதற்கு எதிர்பார்க்கிறோம்.
ஒரு அரசியல் தலைவராக இதுபோன்ற சவாலான சூழ்நிலைகளுக்கு நாமல் ராஜபக்ச இதற்கு முன்னரும் முகங்கொடுத்துள்ளார்.
இது தமக்கு ஒரு புதிய விடயம் அல்ல, இந்த கைது நடவடிக்கையினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது. இந்த சம்பவம் கட்சி மேலும் வலுப்பெற்று முன்னோக்கி நகர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே அமையும்” என்று கூறியுள்ளார்.
இதேவேளை “தன்னைத் தொடர்புபடுத்தி ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், நியாயமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணையை எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவின் எக்ஸ் (X) தளத்தில் அவர் சார்பில் வெளியிட்ட பதிவிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தின் போர்வையைப் பயன்படுத்தி, வெறுப்பு மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்துவதாகவும் குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



