தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் அழியாத இடம்பிடித்துள்ள தந்தை செல்வாவின் நினைவாக, அவரது சமாதி அமைந்துள்ள இடுகாட்டில் கட்டப்பட்டிருந்த நினைவுத் தூபி அடையாளம் தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் தூபி உடைப்பைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் சி்.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“தெல்லிப்பளைப் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுத் தூபி அடையாளந் தெரியாத விஷமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியைத் தற்போது விமர்சிப்பவர்கள் கூட பெரியவரின் செயலை விமர்சிப்பது கிடையாது.
அத்தகையவரின் தூபியை உடைக்கும் இந்த வன்மச் செயலை மேற்கொண்டமையைத் தமிழரசுக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” என்று சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அரசியல் வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் அரசியலில் இயல்பானவை.
இருந்தபோதும் ஒரு நினைவுத் தூபியை இடிக்கும் அளவுக்கு அது இட்டுச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத காரியம் என்பதோடு இந்த செயல் அனைவரது நெஞ்சிலும் மற்றுமோர் இடியாகவே அமைகின்றது.
எனவே, இது தொடர்பில் ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம். இந்த செயலைப் புரிந்த விஷமிகளைக் கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி்.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.



