அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.
குறித்த சட்டமூலத்தின், அரசியலமைப்புக்கு ஏற்புடைய தன்மை தொடர்பான வியாக்கியானத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று (02) தெரிவித்துள்ளது
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணை இன்று (02) இரண்டாவது நாளாக உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இந்த மனுக்கள்,பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஆயத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
குறித்த சட்டமூலத்திற்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்த மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
மனுதாரர்கள் சார்பான சட்டத்தரணிகளின் வாதங்கள் நிறைவடைந்த பின்னர், இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு ஏற்புடையதா? என்பது தொடர்பாக சட்டமா அதிபர் தமது வாதங்களை முன்வைத்தார்.
நேற்று (01) காலை ஆரம்பமான இந்த மனுக்களின் விசாரணை, இரவு 10.30 மணி வரை இடம்பெற்ற நிலையில், இன்று (02) இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



