“ஐயா… ஐயா…. நில்லுங்கோ… என்ட மகனை 30 வருசமாய் தேடுறன் காணாமல் போனவங்களில 31 பேர் கண்டுபிடிக்கப்பட்டதா பத்திரிகையில செய்தி வந்திருக்கு… என்ட மகன் எங்கே என்று சொல்லுங்கோ… இந்த படத்தில இருக்கிறவர் தான் ஐயா என்ட மகன்… ஒருக்கால் பாருங்கோ…. “ என்று யாழ்.மாவட்டச் செயலகத்தின் பிரதான வாயில் படிக்கட்டுகளில் கதறி அழுதவாறு தாயொருவர் வருகின்றார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்சன நாணயக்காரவை நோக்கியே குறித்த தயார் ஓடிவந்து கதறி அழுது மன்றாடியபோதும் அவர் அருகில் இருந்த இளங்குமரன் எம்.பியோ அதிகாரிகளோ தாயாரின் கோரிக்கையை அமைச்சருக்கு மொழிபெயர்த்துக்கூடக் கூறாது மௌனம் காத்துள்ளனர்.
குறித்த மௌனம், நீடிக்கவும், அதனைத் தொடர்ந்து அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கதறி அழுத தாயாரை ஆசுவாசப்படுத்திவிட்டு அவ்விடத்திலிருந்து எவ்வளவு வேகமாகச் செல்ல முடியுமோ அவ்வளவு வேகமாகச் சென்றுவிடுகிறார்.
இந்த அணுகுமுறையானது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரத்தை தற்போதைய அரசாங்கம் எவ்வாறு கையாள முனைகின்றது என்பதற்கான மிகத்தெளிவான பிரதிபலிப்பாகும்.
பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுபூர்வமான கோரிக்கைகளை நேரடியாகச் செவிமடுக்காது, அவர்களை ஆசுவாசப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அந்த விவகாரத்தை மலினப்படுத்தி விடுவதும், வெறும் எண்களின் கணக்காக மாற்றி நீர்த்துப்போகச் செய்வதும் தான் தற்போதைய அநுர அரசாங்கத்தின் போக்காக மாறியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் ஆகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, தனது அன்பிற்குரியவருக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வது அவரது குடும்பத்தின் அடிப்படை உரிமையாகும்; அது அரசியல் கோரிக்கை அல்ல, அடிப்படை மனித உரிமை; அது நீதிக்கான பிரச்சினை’ என மிகவும் நேர்த்தியான வார்த்தைகளால் வெளிப்படுத்தினார்.
மேலும், இது ஒரு சமூகத்திற்கு மட்டும் உரித்தான பிரச்சினை அல்ல இலங்கையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு இன மற்றும் அரசியல் பின்னணியைக் கொண்ட நபர்கள் காணாமல்போயுள்ளனர். இந்தப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக் காண்பது ஒட்டுமொத்த இலங்கைச் சமூகத்தினதும் பொறுப்பாகும்”என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த அழகிய வார்த்தைகள் உதிர்க்கப்பட்டுக் கொண்டிருந்த தருணத்திலேயே மாவட்ட செயலகத்தின் பிரதான வாயிலில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் தாய்மாரும் சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அவர்கள் மாவட்ட செயலகத்துக்குள் பிரவேசித்துவிடக்கூடாது என்பதற்காக பிரதான வாயில்கள் மூடப்பட்டு பொலிஸார் களமிறக்கப்பட்டிருந்தனர் அத்தடைகளை உடைத்து பிரவேசிக்க முயன்ற தாய்மார்களை பொலிஸார் இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருந்தமையும் மிகவும் முக்கியமானது.
பொலிஸாரின் வலிந்த அடக்குமுறையும், அச்சுறுத்தல்களும் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்தபோது, செயலகத்துக்குள் இருந்த நீதி அமைச்சர் ஹர்ஷனவோ அல்லது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனோ அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் முன்னாள் நீதிபதி மகேஷ் கட்டுலந்தவோ வெளியில் வந்திருக்கவில்லை.
அவர்கள், ‘வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் ஒரு சந்திப்பு’ என்ற பெயரில் கடிதங்களை அனுப்பி வருவித்திருந்த உறவுகளை அமரவைத்து, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான தேசிய நினைவு தினத்தை ஒட்டி நினைவுகூர்ந்து கொண்டிருந்தனர். அதுமட்டுமன்றி, அங்கு சமூகமளித்திருந்தவர்கள் மத்தியில், தெற்கிலும் வடக்கிலும் வெவ்வேறு காலப்பகுதிகளில் மனிதர்கள் காணாமலாக்கப்பட்டனர் என்பதை வெளிப்படுத்தி சமநிலைப்படுத்தவே முனைந்து கொண்டிருந்தனர்.
காணாமலாக்கப்படுதல் இரு தேசங்களிலும் நடைபெற்றிருக்கின்றன என்றாலும் வட,கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக அரசு இயந்திரத்தினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட வலிந்து காணாமலாக்கப்படுதல் மற்றும் இனவழிப்புப் பின்னணியை ‘பொதுவான சமூகப் பிரச்சினை’ என்ற போர்வையில் மூடிமறைக்க முடியாது.
தற்போதைய ஆட்சியாளர்களான தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் வெறும் 4 ஆசனங்களுடன் இருந்த காலத்தில், கொழும்பிலும் வடக்கிலும் பாதிக்கப்பட்ட தாய்மார்களுடன் இணைந்து வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். யாழ்ப்பாணம் வந்து அவர்களின் வீடுகளில் இளைப்பாறினார்கள்.
ஆனால், தற்போது அதிகாரத்திற்கு வந்த பின்னர், அதே தாய்மார்கள் போராடும்போது, அவர்களைப் பொலிஸாரைக் கொண்டு பலப்பிரயோகம் செய்து, ஆடைகள் அவிழும் நிலையில் இழுத்து வெளியேற்றும் கொடூரமே அரங்கேறியுள்ளது.
இதேநேரம், இந்த அவலங்களை அறிக்கையிட்ட ஊடகவியலாளர்களை கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் சபித்ததோடு ‘செய்தி என்றால் என்ன என்றும்’ வகுப்பெடுத்திருந்தார். அத்தோடு அநுரவின் தோழர்கள் சிலர் பிரம்மாண்டமாக காணாமல் போனோர் தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம், வெளியில் 10 பேர் வரையே போராடுகிறார்கள்’ என்று சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதும் அவர்களின் சுயரூபத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
யாருடருன் இணைந்து நீதி கேட்டுப் போராடினார்களோ, அவர்களையே தற்போது அடக்குமுறைக்கு உட்படுத்துவதும், அது குறித்துச் செய்தி வெளியிடும் ஊடகங்களைச் சபிப்பதும் அவர்களின் மூன்றாந்தர அரசியல் நயவஞ்சகத்தையே காட்டுகிறது. தம்முடன் ஒன்றாக இருந்து உணவருந்தி களச்செயற்பாட்டில் ஈடுபட்டு பின்னர் கொள்கை முரண்பாட்டால் வெளியேறியிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் திகதி காணாமலாக்கப்பட்டனர்.
அவர்களின் விவகாரத்தில்கூட, கட்சி அரசியலும் அரசு அதிகார மட்டங்களின் நலன்களும் காரணமாக நீதியைக் கோருவதற்கு கூட தயாரில்லதவர்களாக இருக்கும் அநுர அரசாங்கத்தினர் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு எவ்வாறு உண்மையான நீதியைப் பெற்றுத்தருவார்கள் என்பது இங்குள்ள பிரதான கேள்வியாகின்றது.
அரசாங்கமும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகமும் வெளியிடும் புள்ளிவிபரங்கள், பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான வேதனையைத் தணிப்பதற்கு மாறாக, சர்வதேசத்தின் அழுத்தங்களிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு கணக்குக் காட்டும் முயற்சியாகவே தோன்றுகின்றன.
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி மகேஷ் கட்டுலந்த மற்றும் அமைச்சர் ஹர்ஷன வெளியிட்ட தரவுகளின்படி, இதுவரை 23,352 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் 16,966 முறைப்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு முதற்கட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டில் அமைச்சரவை பத்திரத்தின் மூலம் 375 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு, 25 விசாரணைக்குழுக்கள் மூலமாக 2026 ஜூலை மாத இறுதியளவில் 9,819 முறைப்பாடுகளுக்கான பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
எஞ்சிய முறைப்பாடுகள் தொடர்பில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைத்தையும் நிறைவுசெய்ய அரசு திட்டமிட்டுள்ளது என்று பட்டியல் நீள்கின்றது. அதுமட்டுமன்றி, இதுவரை முறைப்பாடு கிடைக்கப்பெற்றவர்களில் 31 பேர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் இராணுவத்தினரிடம் இருந்து எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதைக் கூறி மீண்டும் படைகளுக்கு வெள்ளையடிக்கும் செயற்பாட்டையே மேற்கொள்ள முயற்சிக்கின்றது.
கண்டுபிடிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டிலிருந்து மூவரும், யாழ்ப்பாணம் (4), திருகோணமலை, அனுராதபுரம் (1), கம்பஹா (2), மட்டக்களப்பு (3), மற்றும் களுத்துறை, அம்பாந்தோட்டை, வவுனியா, குருநாகல், மாத்தறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டாலும், அவர்களின் தனியுரிமையைக் காரணம் காட்டி குடும்பத்தினரைத் தவிர வெளிநபர்களுக்கு விபரங்கள் தரப்படமாட்டாது என்று மறுக்கப்படுவதில் வெளிப்படைத்தன்மை கேள்விக்குள்ளாகின்றது.
மேலும், 5,427 குடும்பங்களுக்கு 200,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், 2,719 காணாமல் போனமைக்கான சான்றிதழ்களும் 409 இறப்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன என்று பெருமிதமாக கூறும் அலுவலகம் தாய்மார்களுக்குத்தேவை வெறும் இழப்பீடோ, உளச்சமூக நிவாரணமோ, அஸ்வசும மற்றும் வாழ்வாதார உதவிப் பொதிகளோ அல்ல. ‘என் பிள்ளைக்கு என்ன நடந்தது, அவனைக் கடத்திய குற்றவாளிகள் யார்?’ என்ற உண்மையே என்பதை இன்னமும் புரிந்திருக்கவில்லை.
இதேநேரம், நாடளாவிய ரீதியில் கண்டறியப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் விவகாரத்திலும் அரசாங்கத்தின் அணுகுமுறை சந்தேகத்திற்குரியதாகும். செம்மணி மனிதப் புதைகுழி 3 கட்டங்களாக சுமார் 110 நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று, 584 மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக இதுவரை 57 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும்அடுத்த கட்டங்களுக்குத் தேவையான நிதியை அரசு வழங்கும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
ஆனால், கண்டெடுக்கப்பட்ட எச்சங்களின் மரபணு சோதனைகளும் தொல்பொருள் திணைக்களத்தின் அறிக்கைகளும் தாமதிக்கப்பட்டுக்கொண்டே போகின்றன. மேலும், கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை கைகதியாக உள்ள லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணி புதைகுழி தொடர்பில் சாட்சியமளிக்கத் தயார் எனக் கூறிய நிலவரத்தில், அவரை காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலக பிரதிநிதிகள் சிறையில் சென்று சந்தித்தபோதிலும், ‘இரகசியத்தன்மையைப் பேண வேண்டும்’ என்ற போர்வையில் பேசுபொருட்களை மூடிமறைப்பது சந்தேகங்களை மேலும் தீவிரப்படுத்துகிறது.
இலங்கையின் உள்நாட்டு நீதிக்கட்டமைப்புகளும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் போன்ற பொறிமுறைகளும் அரசாங்கத்தின் குற்றங்களை மறைக்கும் கருவிகளாகவே செயல்படுகின்றன என்பதை வரலாறு உணர்த்துகிறது. இத்தகைய சூழலில், இலங்கையில் நிகழ்ந்தேறிய வலிந்து காணாமலாக்கப்படுதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையின் அவசியமும் சர்வதேச மனித உரிமைகள் கட்டமைப்புக்களின் தலையீடும் இன்றியமையாததாகிறது.
அர்ஜென்டினாவில் 1970களில் நடைபெற்ற ‘அழுக்கு யுத்தத்தின்’ (Dirty War) போது காணாமலாக்கப்பட்ட தங்கள் பிள்ளைகளுக்காகப் போராடிய ‘பிளாசா டி மாயோ தாய்மார்கள்’ (Mothers of the Plaza de Mayo) அமைப்பின் இடைவிடாத போராட்டமாகட்டும், அல்லது குவாத்தமாலா மற்றும் போஸ்னியாவில் இடம்பெற்ற மனிதப் புதைகுழி ஆய்வுகளாகட்டும் அவை அனைத்தும் உண்மையான நீதியை எட்டுவதற்கு சர்வதேச அளவிலான சுயாதீன நிபுணத்துவ விசாரணைகளும் தடயவியல் மரபணு சோதனைகளுமே வழிவகுத்தன.
இலங்கையிலும் அரசு இயந்திரமும் முப்படைகளும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஒரு சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணை மூலமே நீதியை வெளிக்கொண்டுவர முடியும்.
அதேவேளை, நீதிக்கான இந்தப் நீண்ட போராட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் தரப்பில் உள்ள அகநிலை பலவீனங்களையும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமலாக்கப்பட்டவர்களின் அன்புக்குரியவர்களும், அவர்களது சங்கங்களும் பல்வேறு குழுக்களாகப் பிளவுபட்டு நிற்பது நீதிக்கான பயணத்தில் பாரிய தடையை ஏற்படுத்தியுள்ளது.
வேறு வேறு அமைப்புகளாகவும், அரசியல் நன்மைகளுக்காகவும் இப்போராட்டம் சிதறடிக்கப்படும்போது, அரசாங்கத்திற்கும் பேரினவாத அரசமைப்பிற்கும் அதுவே பெரும் சாதகமாக மாறுகிறது. ‘நீதிக்கான நீள்பயணம்’ எனும் மகுடத்தில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நாளையதினம் சர்வதேச மாநாடுகளும், கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதுகூட இரு அணிகளின் ஏற்பாட்டில் நடைபெறுகின்றன.
இந்த நிகழ்வுகளில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபை பிரதிநிதிகள் பங்கேற்றாலும், பாதிக்கப்பட்ட தாய்மார்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு, உறுதியான ஒரே குரலாக சர்வதேசத்தின் கதவுகளைத் தட்டாத வரை, அரசாங்கங்கள் வழங்கும் போலி வாக்குறுதிகளையும் அடக்குமுறைகளையும் முறியடிப்பது கடினமானதாகும்.
2026 ஆம் ஆண்டின் வலிந்து காணாமலாக்கப்படுதல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தின் உலகளாவிய மகுட வாசகமான ‘பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலிடம்; இப்போதே நடவடிக்கை எடுங்கள்’ (Victims first. Actions now) என்பதற்கேற்ப, இலங்கை அரசு வெறும் சட்டம், நிதி ஒதுக்கீடு மற்றும் இழப்பீட்டுப் பொதிகளைக்காட்டி ஏமாற்றாமல் உண்மையான நீதியை வழங்க முன்வர வேண்டும்.
அரசுகள் மாறினாலும் பேரினவாத அரசு இயந்திரத்தின் மனோபாவம் மாறவில்லை என்பதை யாழ்.மாவட்ட செயகலகத்தின் வாசலில் தாய்மார்கள் மீது நடத்தப்பட்ட பொலிஸ் தாக்குதல்கள் நிரூபித்துள்ளன.
எனவே, உள்நாட்டு பொறிமுறைகள் முற்றிலும் செயலிழந்துவிட்ட நிலையில், சுயாதீனமான சர்வதேச விசாரணையொன்றின் மூலமே உண்மையையும் நீதியையும் கண்டடைய முடியும் என்பதும், அதற்கு பாதிக்கப்பட்ட மக்களின் பிளவற்ற ஒன்றுபட்ட போராட்டமே முதன்மைச் சக்தியாக இருக்கும் என்பதும் தெளிவாகிறது. இதனை அன்புக்குரியவர்களுக்காக போரடுபவர்களும், அவர்களை இயக்குபவர்களும் உணராதவரையில் நீதிக்கான பயணம் நீண்டதாகவே இருக்கும்.



