சகல எதிர்ப்புக்கு மத்தியிலும் 22 ஆவது திருத்தம் தொடரும் என்கிறார் நீதி அமைச்சர்!

22வது திருத்தச் சட்டம் தொடரும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உத்தேச 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அரசாங்கம் கைவிடாது என்றும் நீதித்துறையில் தேவையான சீர்திருத்தங்கள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்றும் அவர் பதுளையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் ஏற்பாடுகள் சில குறிப்பிட்டவர்களுக்கு அனுகூலமாகச் செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.

இந்த வயது நீடிப்பானது ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் பொருந்தும் என்று அவர் விளக்கமளித்தார்.

பல ஆண்டுகளாக முறையான சீர்திருத்தங்கள் செய்யப்படாத காரணத்தினால் நீதித்துறையில் சுமார் 1.1 மில்லியன் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.

இந்தநிலையில், ஊழல் மற்றும் மோசடிகளுடன் தொடர்புடையவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதும் நீதித்துறையை வலுப்படுத்துவதும் அரசாங்கத்தின் பிரதான வாக்குறுதிகளாகும் என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்த ஆண்டின் இறுதிக்குள் இதன் உறுதியான பலன்களை மக்கள் காண முடியும் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நாளைய தினம் (01) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதன்படி குறித்த மனுக்களை பரிசீலனை செய்வதற்காக ஐவர் அடங்கிய நீதியரசர்கள் ஆயம் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆயத்தின் தலைவராக பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன செயற்படவுள்ளார்.

நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ச்சுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் குறித்த ஆயத்தின் ஏனைய உறுப்பினர்களாக செயற்படவுள்ளனர்.